Wednesday 11 September 2013

இரண்டாம் கட்ட டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டம்


( எஸ்.ஜே.பிரேம் ஆனந்த்)
ஆலையடிவேம்பு பிரதேசம் முழுவதும் கடந்த 06-09-2013 அன்று பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் 10-09-2013, செவ்வாய்க்கிழமை காலை மேலும் சில இடங்களில் முன்னெடுக்கப்பட்டன.

இவ் வேலைத்திட்டத்திற்கு இணைப்பாளராக பிரதேச செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பாடல் உத்தியோகத்தர் காசுபதி கிரிசாந்தன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் அக்கரைப்பற்று – 7/1 இராம கிருஸ்ண மிசன் மகா வித்தியாலயம், அக்கரைப்பற்று – 8 விவேகானந்தா வித்தியாலயம், கண்ணகிகிராமம் கண்ணகி வித்தியாலயம் ஆகிய பாடசாலை வளாகங்கள், வாச்சிக்குடா ஸ்ரீ மகா பெரியதம்பிரான் ஆலய வளாகம், அக்கரைப்பற்று – 8/3 பலநோக்கு கூட்டுறவுச்சங்க வளாகம் என்பவற்றிலும் வடிகான்கள் அமையப்பெற்றுள்ளதும் மழைக்காலங்களில் வெள்ளநீர் வழிந்தோடும் வீதிகளுமான அக்கரைப்பற்று – 7/4 வீரமாகாளி அம்மன் ஆலய வீதி, அக்கரைப்பற்று – 8/1 முதலியார் வீதி, அக்கரைப்பற்று – 7 ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய கல்லூரி வீதி, அக்கரைப்பற்று – 7/1 சிவா பேக்கரி வீதி ஆகிய இடங்களில் சிரமதான நிகழ்வுகள் நடைபெற்றன.

இப் பரந்த வேலைத்திட்டத்தில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பி.கேதீஸ்வரன், கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள், கிராமிய அபிவிருத்திச்சங்க மற்றும் மாதர் அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களுடன் பொதுமக்களும் பங்கெடுத்தனர்.

இந்த டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகள் ஆலையடிவேம்பு பிரதேசத்தின் ஏனைய சில பகுதிகளில் எதிர்வரும் 12.09.2013, வியாழக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.













No comments: