Thursday, 16 March 2017

புலமைப்பரிசில்


திவிநெகும திணைக்களத்தின் கல்வி அபிவிருத்திக்கான சிப்தொற கல்விப் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்று (15)  மாலை நடைபெற்றிருந்தது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் திவிநெகும தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் காசோலை மற்றும் சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.

திவிநெகும சமூக பாதுகாப்புப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் ஊடாக 24 மாதங்களுக்குமான கல்விச் செலவுகளுக்கான காசோலைகளும், புலமைச் சான்றிதழ்களும் அதிதிகளால் மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 2015, 2016 ஆம் ஆண்டுகளில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் திறமைச் சித்தியடைந்து 2017, 2018 ஆம் ஆண்டுகளில் உயர்தரக் கல்வியைத் தொடரும் மிகவும் வருமானம் குறைந்த 34 மாணவ, மாணவிகள் இப்புலமைப்பரிசில்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், ஆலையடிவேம்பு கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.இராசமாணிக்கம் உள்ளிட்ட அதிகாரிகள், திவிநெகும முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அரசாங்கமும் திவிநெகும அபிவிருத்திப் பிரிவும் முன்னெடுக்கும் இத்திட்டத்தினைப் புலமைப்பரிசில்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்களின் பெற்றோர்கள் பாராட்டியதுடன், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்நிகழ்வின்போது தமது நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டனர்.

குறித்த நிகழ்வுக்கான அனுசரணையை அம்பாறை மாவட்ட சமுக நல்வாழ்வு அமைப்பு (SWOAD) வழங்கியிருந்ததுடன், அதன் சமுக சந்தைப்படுத்தல் திட்ட உத்தியோகத்தர் என்.சசிதரனால் உயர்தரக் கல்வியை முடித்த பின்னர் பல்கலைக்கழக அனுமதி பெறாத மாணவர்களை இணைத்து தேசிய தொழிற்தகைமை சான்றிதழுடன் வழங்கப்பட்டுவரும் தொழிற்பயிற்சிகள் குறித்து அங்கு தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.















No comments: