Thursday, 16 March 2017

ஆலையடிவேம்பில் வீதிகளின் புனரமைப்புப் பணிகள் அங்குரார்ப்பணம் செய்துவைப்பு


தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரனின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு-செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் ஆலையடிவேம்பு பிரதேசத்தின் நாவற்காடு மற்றும் அக்கரைப்பற்று 7/4 கிராம சேவகர் பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்ட 6 கிறவல் வீதிகளைக் கொங்கிரீட் இட்டு செப்பனிடுவதற்கான வேலைத்திட்டங்களை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வுகள் நேற்றும் இன்றும் (15 & 16) இடம்பெற்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வுகளில் சிறப்பு அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸனும், திவிநெகும தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன், ஆலையடிவேம்பு பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன், கிராம உத்தியோகத்தர் கே.பிரதீபா ஆகியோருடன் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்த குறித்த நிகழ்வுகளை நாவற்காடு கிராம பொருளாதார உத்தியோகத்தர் எஸ்.சமனந்தகுமார ஏற்பாடு செய்திருந்தார்.

இதன்போது மழைக் காலங்களில் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் நாவற்காடு கிராம சேவகர் பிரிவிலுள்ள மகாசக்தி வீதி, சிவலிங்கம் கடை வீதி, வேலாயுதம் வீதி, மகேஸ்வரன் வீதி மற்றும் சம்சன் வீதி ஆகியவற்றையும் அக்கரைப்பற்று 7/4 கிராம சேவகர் பிரிவிலுள்ள கலாசார மண்டபப் பின் இரண்டாம் குறுக்கு வீதியையும் கொங்கிரீட் இட்டு செப்பனிடுவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
















No comments: