Thursday, 2 March 2017

எதிர்கால வரட்சி நிலையைக் கருத்திற்கொண்டு குடிநீர் விநியோகத்தை அதிகரித்து வழங்க ஏற்பாடு


ஆலையடிவேம்பு பிரதேச அனர்த்த முகாமைத்துவக் குழுவினுடைய அவசர ஒன்றுகூடலொன்று இன்று (03) காலை அதன் தலைவரும் பிரதேச செயலாளருமான வி.ஜெகதீஸன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

ஆலையடிவேம்பு பிரதேச அனர்த்த முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.தனராஜனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த ஒன்றுகூடலில் தற்போதைய மழைக்காலத்தையடுத்து ஆரம்பிக்கவுக்கவுள்ள வரட்சிக் காலத்தைக் கருத்திற்கொண்டு ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அதிக பாதிப்புக்களை எதிர்கொள்ளவுள்ள கண்ணகிகிராமம், அளிக்கம்பை உள்ளிட்ட கிராமங்களுக்கு ஆலையடிவேம்பு பிரதேச சபையின் உதவியுடன் விநியோகிக்கப்பட்டுவரும் குடிநீரை அத்தியாவசியத் தேவைகளுக்குப் போதுமானவகையில் தொடர்ந்து விநியோகித்தல் மற்றும் ஏனைய உதவிகளை இடர் முகாமைத்துவத் திணைக்களத்தினூடாகப் பெற்றுக்கொடுத்தல் என்பன தொடர்பாகப் பிரஸ்தாபிக்கப்பட்டதோடு, சுகாதாரப் பிரச்சனைகளைக் குறைப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார சேவைகள் அதிகாரி ஏ.எம்.இஸ்மாயில் தனது கருத்துக்களை அங்கு தெரிவித்திருந்தார்.

குறித்த ஒன்றுகூடலில் உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம், ஆலையடிவேம்பு பிரதேச சபை, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.







No comments: