ஒரு லட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் சுகாதார சேவைகள் திணைக்களத்தில் உள்வாங்கப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஒரு லட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தொழில் பெற்றுள்ளவர்கள் நிரந்தர ஊழியர்களாக சுகாதார சேவையில் உள்வாங்கப்படவுள்ளனர் என பரவிவரும் வதந்தி முற்றிலும் தவறானது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி 23 மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது இவ்வாறானதொரு கருத்து சுகாதார ஊழியர்களுக்கு மத்தியில் பரவிவருவதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்த வேலையில் அதற்குப் பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
ஒரு லட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டம் மிகக் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி அவர்களை வறுமையிலிருந்து விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முறையான கல்வி அல்லது தொழில்முறை தகுதிகள் அல்லது திறன்கள் இல்லாதவர்கள் மட்டுமே அத்திட்டத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு மருத்துவமனைகள், பாடசாலைகள் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களில் தொழிலாளர்கள், துப்புரவு பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் இயந்திர இயக்குநர்களாக பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சிக்குப் பின்னர், அவர்களுக்கு அந்தந்த நிறுவனங்களில் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும். இருப்பினும், அவர்கள் சுகாதார சேவையில் உள்வாங்கப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.
No comments:
Post a Comment