அம்பாறை பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை கொரோனா அனர்த்தங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட மாவட்ட விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
புதன்கிழமை (23) மற்றும் வியாழக்கிழமை (24) இரு தினங்களாக காலை முதல் மதியம் வரை இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது சம்மாந்துறை புறநகரப்பகுதி, கல்முனை நகரப்பகுதி, நற்பிட்டிமுனை பிரதான சந்தி ,தாளவட்டுவான் சந்தி, பாண்டிருப்பு, சவளக்கடை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டன.
இத் திடீர் சோதனையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணியாது செல்வது, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது, அதிவேகமாக செல்வது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டு வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள் பொலிஸாரினால் வழங்கப்பட்டன.
இச்சோதனை நடவடிக்கையானது அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்க வழிகாட்டலில் இடம்பெற்றதுடன் இதன் போது அம்பாறை மாவட்ட விசேட போக்குவரத்து பொலிஸாருடன் இணைந்து கல்முனை, சம்மாந்துறை, சவளைக்கடை, பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸாரும் இணைந்து முக்கிய சந்திகள் பிரதான வீதிகளில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
குறிப்பாக இச்சோதனை நடவடிக்கையின் போது 117 பேர் மேற்கூறிய குற்றங்களுக்காக தண்டப்பணம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment