Sunday, 12 January 2020

பனங்காடு வைத்தியசாலை 24 மணிநேரமும் இயங்கும்....

haran


கடந்த பல தசாப்தங்களாக தரமுயர்த்தப்படாமல் புறக்கணிக்கப்பட்டதுடன் 13 கிராம மக்களின் கோரிக்கையாகவும் தேவையாகவும் இருந்த அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காடு வைத்தியசாலை புதிய அரசாங்கத்தின் அதிரடி செயற்பாடுகள் காரணமாக தரமுயர்த்தப்பட்டது.




குறித்த வைத்தியசாலை நேற்றைய  தினம் சகல வசதிகளையும் கொண்டதான 'சி' தரத்தினையுடைய பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டதுடன் அதன் பெயர்பலகையும் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் மேற்கொண்ட முயற்சியின் பயனாக தரமுயர்த்தப்பட்ட இந்த வைத்தியசாலையின் பெயர்பலகை திரைநீக்கம் செய்யும் நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜி.சுகுணன் கலந்து கொண்டு பெயர்பலகையினை திறந்து வைத்ததுடன் எதிர்காலத்தில் சகல வசதிகளையும் கொண்டதாக குறித்த வைத்தியசாலை 24 மணிநேரமும் இயங்கும் என தெரிவித்தார்.

மேலும் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் வேண்டுகோளுக்கமைய் இவ்வருடத்தினுள் ஆய்வு கூடமும் பல் வைத்திய பிரிவும் ஆரம்பிக்கப்படும் எனவும் புதிய வைத்தியசாலை கட்டட தொகுதி நிர்மானிக்கப்படும் எனவும் விரைவில் 'பி' தரத்திற்கு வைத்தியசாலை மீண்டும் தரம் உயர்த்தப்படும் எனவும்  உறுதியளித்தார்.

வைத்தியசாலை தரமுயர்த்தல் நிகழ்விற்கு வருகை தந்த கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜி.சுகுணன் உள்ளிட்ட அதிகாரிகளை வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்தி குழு  உறுப்பினர்கள் இணைந்து வரவேற்றனர்.

பின்னர் அனைவரும் இணைந்து வைத்தியசாலையின் பெயர்ப்பலகையினை திரைநீக்கம் செய்து வைத்ததுடன் இடம்பெற்ற கூட்டத்திலும் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த வைத்தியர்கள் மற்றும் அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் சார்பில் இயன் மருத்துவர் க.கரன்ராஜ் வைத்தியசாலையை தரமுயர்த்த பாடுபட்ட கருணா அம்மான் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜி.சுகுணன் உள்ளிட்ட அபிவிருத்திகுழு உறுப்பினர்கள் நலன் விரும்பிகள் தேவையை வெளிக்கொண்டு வந்த ஊடகங்களுக்கும் விசேடமாக நாட்டின் ஜனாதிபதிக்கும் சுகாதார அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்தனர்.

இதன் பின்னர்  கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜி.சுகுணன் மற்றும் அபிவிருத்தி குழு உறுப்பினர்களும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.





No comments: