Friday, 20 December 2019

எரிபொருள் நிரப்பு நிலையம் மூடப்பட்டது. 

haran


(வி.சுகிர்தகுமார்)
அம்பாரை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் பொதுமகன் இருவரால் சரமாரியாக தாக்கப்பட்டமையை தொடர்ந்து இன்று சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் மூடப்பட்டது.

சம்பவத்தில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் இருவரும் அவர்களது நண்பர் ஒருவரும் காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் மூடப்பட்டுள்ளதுடன் இதனால் வாகன உரிமையாளர்களும் பொதுமக்களும் எரிபபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருகை தந்து அசௌகரியங்களை எதிர்கொண்டதுடன் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

நேற்றைய தினம் மாலை குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் பணத்தை கொடுக்காமல் தங்களது மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் நிரப்புமாறு கேட்டுக்கொண்டதாகவும் பணமில்லாமல் பெற்றோல் வழங்க முடியாது என ஊழியர்கள் தெரிவித்தாகவும் இதனாலேயே ஊழியர்கள் தாக்கப்பட்டதாகவும் எரிபொருள் நிலையத்திற்கு பொறுப்பான ஊழியர் தெரிவித்தார்.

மேலும் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் அவர்களை காப்பாற்ற முயன்ற இன்னுமொரு இளைஞனும் தாக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதனால் பலத்த காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இன்றைய நாள் எரிபொருள் நிரப்பு நிலையத்தினை திறக்க முடியாமல் போனதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் பலநோக்கு கூட்டுறவுச்சங்க தலைவரும் நிருவாகத்தினரும் சம்பவம் தொடர்பிலான மேலதிக நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனார்.

இதே நேரம் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள சீசீடிவி கமராவின் பதிவுகளை பார்வையிட அக்கரைப்பற்று பொலிசார் வருகை தந்து அதனை பார்வையிட்டதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  



No comments: