Wednesday, 7 August 2019

முன்பிள்ளை பாடசாலை ஆசிரியர்களின் மகத்தான அர்ப்பணிப்பை அளவிட முடியாது


  முன்பிள்ளை பாடசாலை ஆசிரியர்களின் மகத்தான அர்ப்பணிப்பை அளவிட முடியாது



(வி.சுகிர்தகுமார்

சிறிய வேதனத்துடன் அதிக சேவையினை புரியும் முன்பிள்ளை பாடசாலை ஆசிரியர்களின் மகத்தான அர்ப்பணிப்பை அளவிட முடியாதுள்ளது என ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியோகத்தர் ஆ.சசீந்திரன் தெரிவித்தார்.


முன்பிள்ளை அபிவிருத்தி மற்றும் பராமரிப்பு பற்றிய தேசிய வாரத்திற்கு இணைவான நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் நேற்று  (06) நடைபெற்றது.

பிரதேச செயலகத்தின் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே.ஜெஸீலா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியோகத்தர் ஆ.சசீந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் எமது பிள்ளைச் செல்வங்களை வளமானவர்களாக மாற்றும் பாரிய பொறுப்பின் அதிக பங்களிப்பை முன்பிள்ளை பாடசாலை ஆசிரியர்கள் மேற்கொள்கின்றனர். அவர்களால் உருவாக்கிக் கொடுக்கப்படும் சிறந்த பிள்ளைகளையே ஏனைய ஆசிரியர்கள் பொறுப்பேற்று வழி நடத்துகின்றனர். ஆகவே கல்வியில் அதிக பங்காற்றும் முன்பிள்ளை பாடசாலை ஆசிரியர்களை கௌரவிக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களின் முக்கிய கடமையும் என்றார்.

மேலும் குறித்த ஆசிரியர்களின் சேவையினை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் அரசாங்கம் அவர்களுக்கான பொருத்தமான ஊதியத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

சமுர்த்தி தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் மற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் பவானி வரதராஜன் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.முஸ்பிரா உளவள உத்தியோகத்தர் றாசிமுகமட், ஏ.எம்.சப்ரினா, நிவாரண உத்தியோகத்தர் எம்.எஸ்.பர்ஹானா, மற்றும் எஸ்.அஜ்மலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

'எக்காலத்திலும் பராமரித்துக் காக்க வேண்டிய முத்துக்கள் போன்ற பிள்ளைகளாவோம்' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த பல்வேறு முன்பிள்ளை பாடசாலைகளின் மாணவர்கள் கலந்து கொண்டு தமது திறமைகளை கலை நிகழ்வுகளின் மூலம் வெளிப்படுத்தினர்.

மங்கள விளக்கேற்றல் இறைவணக்கம் ஆகியவற்றுடன் ஆரம்பமான நிகழ்வில் வரவேற்பு நடனம் மூலம் மாணவிகள் வருகை தந்தவர்களை வரவேற்றனர்.

தொடர்ந்து மாணவச் செல்வங்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் மேடையில் அரங்ககேற்றப்பட்டதுடன் வருகை தந்தவர்களின் பாராட்டினையும் மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்.

இறுதியாக நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.










சிறிய வேதனத்துடன் அதிக சேவையினை புரியும் முன்பிள்ளை பாடசாலை ஆசிரியர்களின் மகத்தான அர்ப்பணிப்பை அளவிட முடியாது Rating: 4.5 Diposkan Oleh: Team New

No comments: