வி.சுகிர்தகுமார்
அம்பாரை மாவட்டத்தில் இந்து பௌத்த மக்களால் போற்றி வழிபடப்படும் அம்பாரை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு (27) சிறப்பாக நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன்; தலைமையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்த வழிபாட்டுக்கிரியைகளில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன், அக்கரைப்பற்று விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலைய தலைவர் த.கயிலாயபிள்ளை நிருவாக உத்தியோகத்தர் ஆ.சசீந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
விபுலானந்தா சிறுவர் இல்ல மாணவர்களின் பஜனை வழிபாடுகளுடன் மாலை இடம்பெற்ற விநாயகப்பெருமானுக்கான விசேட பூஜைகளின் பின்னர் கொடித்தம்ப பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நாதஸ்வர மேளவாத்தியங்கள் முழங்க வசந்த மண்டப பூஜைகள் நடைபெற்றதுடன் விநாயகப் பெருமானின் உள்வீதி வலமும் இடம்பெற்றது.
கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்;துடன் ஆரம்பமான மகோற்சவமானது 10நாட்கள் இடம் பெறுகின்ற பிரதேச ரீதியான திருவிழாக்களுடனும் 01ஆம் திகதி மாலை இடம்பெறும் இந்து பௌத்த கலாசார நிகழ்வுகள் உள்ளடங்கிய அம்பாரை நகர நகர்வலத்துடனும் 02ஆம் திகதி காலை 10மணியளவில் இடம்பெறும் தீர்த்தோற்சவம், மகேஸ்வரப்பூஜை மாலை நடைபெறும் கொடியிறக்கம், திருப்பொன்னூஞ்சல். ஆகியவற்றுடனும் 04ஆம் திகதி இடம்பெறும் சங்காபிசேகம் மற்றும் வைரவர் பூஜையுடனும் நிறைவுறும்.
ஆலய தலைவர் வ.கருணைநாதன்;; தலைமையில் நடைபெறும் வழிபாட்டுக் கிரியைகளை ஆலயத்தின் உற்சவகால பிரதகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம்குருக்கள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க.கு.நகுலேஸ்வரக்குருக்கள் தலைமையிலான குருமார்கள் நடாத்தி வைக்கின்றனர்.
இதேவேளை நடைபெற்ற நிகழ்வுகளிலும் வழிபாடுகளிலும் நாட்டின் பல பாகங்களிலுமிருந்து வருகை தந்த பெருந்திரளான இந்துக்களும் அதிகளவிலான பௌத்த அடியார்களும் கலந்து கொள்கின்றமை சிறப்பம்சமாகும்.