(ஹிருஸ்மன்) கண்ணகி வழிபாட்டிற்குப் பிரசித்தி பெற்ற இலங்கையின்
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள பனங்காடு,
பட்டிநகரில் குடிகொண்டுள்ள அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி
திருக்குளிர்ச்சி மகோற்சவம் நேற்று (29) பல்லாயிரக்கணக்கான அம்மன் அடியவர்களின்
பிரசன்னத்துக்கு மத்தியில் நடைபெற்றது.
கண்ணகி வரலாற்றுடன் தொடர்புடைய கண்டிய மன்னரின் மானியம் பெற்றதும், பொற்புறா
வந்த காவியம் பாடப்பட்டதுமான இவ்வாலயத்தின் வருடாந்த திருக்குளிர்ச்சி உற்சவமானது
கடந்த 25 ஆந் திகதி இடம்பெற்ற திருக்கதவு திறக்கும் வழிபாடுகளுடன் ஆரம்பமானது.
தொடர்ந்து 27 ஆந் திகதிவரை நடைபெற்ற விசேட அபிசேக மூன்று காலப் பூஜைகளுடன்
இடம்பெற்று 28 ஆந் திகதி இரவு நடைபெற்ற கல்யாணக்கால் நடும் நிகழ்வுடனும், நேற்று (29)
நடைபெற்ற திருக்குளிர்ச்சி, இன்று (30) நடைபெறும் கவடாப்பிட்டி பிள்ளையார் ஆலயப்
பொங்கல் மற்றும் ஜயனார், வைரவர், நாகேஸ்வரர் பூஜையுடனும் நிறைவுறும்.
நேற்று முன்தினம் (28) இரவு கல்யாணக்கால் நடும் நிகழ்வு பெருந்திரளான
பக்தர்களின் வேண்டுதலுடன் இடம்பெற்றது. தொடர்ந்து நேற்று (29) காலை
நூற்றுக்கணக்கான கண்ணகிகிராம மக்களின் காவடி ஆட்டங்களுடனான ஊர்வலம் ஆலயத்தை
சென்றடைந்தது.
ஆலயத்தைச் சென்றடைந்த ஆயிரக்கணக்கான அடியார்களின் நன்மை கருதி ஆலையடிவேம்பு
பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன் தலைமையிலான பிரதேச செயலக உத்தியோகத்தர்களும்
சில பொதுமக்களும் தாகசாந்திப் பந்தல்களை அமைத்து மோர் நீராகாரங்களை அங்கு
வழங்கினர்.
இதேவேளை ஆலயத்தில் விநாயகர் பொங்கல் வழிபாட்டிற்கான பூஜைகள் நடைபெற்றதன்
பின்னர் பொதுமக்கள் பொங்கலிடும் வேலைகளில் ஈடுபட்டதுடன் திருக்குளிர்ச்சி
வழிபாடுகள் ஆரம்பமாகின.
பரிவார ஆலயங்களுக்கான பூஜையைத் தொடர்ந்து கல்யாணக்கால் பந்தலுக்கான பூஜை
நடைபெற்றதன் பின்னர் அம்மனை குளிர்ச்சிப்படுத்தும் பாடல்கள் பாடப்பட்டு
குளிர்ந்தருளல் பூஜை இடம்பெற்றது.
பின்னர் அம்மனவள் அடியார்களுக்கு அருள் வழங்கும் வகையில் கல்யாணக்கால் பந்தலைச்
சுற்றி ஆலய பூசகரால் வலம் கொண்டு செல்லப்பட்டாள். இதன்போது அங்கு கூடியிருந்த
ஆயிரக்கணக்கான அடியார்கள் குலவை சத்தத்துடன் ஆரோகரா எனும் வேண்டுதலையும் வானைப் பிளக்க
வேண்டிநின்றனர்.
நிறைவாக அம்மன் மீது குளிர்ந்தருளச் செய்யப்பட்ட நீர் அங்கிருந்த பக்தர்கள்
மீது ஆலய பூசகரால் தெளிக்கப்பட்டதன் பின்னர் பூஜைகள் நிறைவடைந்தன.
ஆலய தலைவர் க.கார்த்திகேசு தலைமையில் இடம்பெற்ற திருக்குளிர்ச்சி வழிபாடுகளை
ஆலய பூசகர் கு.ரவீந்திரநாதன் தலைமையிலான பூசகர்கள் நடாத்தி வைத்தனர்.
No comments:
Post a Comment