Wednesday, 28 June 2017

ஆலையடிவேம்பில் வாழ்வாதார உதவியாக தொழில் உபகரணங்கள் வழங்கிவைப்பு




ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சிறுகைத்தொழில் உற்பத்திகளில் ஈடுபடும் நலிவுற்ற தொழிலாளர்களுக்கான வாழ்வாதார உதவியாகத் தொழில் உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (28) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) நிதியுதவியோடு அதன் பங்காளி நிறுவனமான அம்பாறை மாவட்ட சமுக நல்வாழ்வு அமைப்பினால் (SWOAD) ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் EU-SDDP செயற்திட்டத்தின் ஒரு பகுதியான வாழ்வாதார உதவிகள் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் பயனாளிகளாகத் தெரிவுசெய்யப்பட்டோருக்குக் குறித்த தொழில் உபகரணங்கள் அங்கு வழங்கிவைக்கப்பட்டன.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத் திட்டமிடல் பிரிவோடு இணைந்து அம்பாறை மாவட்ட சமுக நல்வாழ்வு அமைப்பின் குறித்த திட்ட அமுலாக்கல் உத்தியோகத்தர் வை.சுகேந்திரராஜ் ஏற்பாடு செய்திருந்த இவ்வைபவத்தில் ஆலையடிவேம்பு பிரதேச பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு பிரதேச செயலாளரோடு இணைந்து குறித்த வாழ்வாதார உதவிகளை வழங்கிவைத்தனர்.

இதன்போது குறிப்பிடத்தக்க அம்சமாக ஆலையடிவேம்பு பிரதேசத்தின் கரையோரச் சூழலை வளப்படுத்தும் நோக்கோடு பிரதேச செயலாளரால் விடுக்கப்பட்ட விசேட வேண்டுகோளுக்கிணங்க ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) பங்களிப்போடு அம்பாறை மாவட்ட சமுக நல்வாழ்வு அமைப்பினால் (SWOAD) தருவிக்கப்பட்ட நீண்டகாலப் பயன்தரும் தென்னை மற்றும் மாமரக் கன்றுகள் தெரிவுசெய்யப்பட்ட பொதுமக்களுக்கு அங்கு வழங்கிவைக்கப்பட்டன.

















No comments: