Wednesday, 11 January 2017

மார்கழித் திருவாதிரையை முன்னிட்டு ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தில் இடம்பெற்ற தாகசாந்தி வைபவம்


துன்முகி வருட மார்கழித் திருவெம்பாவையின் இறுதிநாளான இன்றைய திருவாதிரைத் திருவிழாவை முன்னிட்டு இந்துமகா சமுத்திரத் தீர்த்தோற்சவ ஊர்வலங்களில் பங்குபெறுகின்ற அடியவர்களின் தாகம் தீர்க்கும் தாகசாந்தி வைபவமொன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலக வளாகத்தில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதிப் பெருமானின் திருத்தலத்தில் இன்று (11) காலை இடம்பெற்றது.

ஆலயத்தின் தலைவரும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருமான வி.ஜெகதீஸன் தலைமையில் இடம்பெற்ற குறித்த தாகசாந்தி வைபவத்தில் ஆலயத் திருப்பணிச்சபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு அடியவர்களுக்கான குளிர்பானங்களை வழங்கி உதவியிருந்தனர்.

இதன்போது ஸ்ரீ மஹா கணபதிப் பெருமானின் ஆலய முன்றலில் வைத்து இந்துமகா சமுத்திரத் தீர்த்தோற்சவ வைபவங்களில் கலந்துகொண்டு தம் பெருமானின் திருச்சொருபங்களைத் தாங்கிய ஊர்திகளைப் பின்தொடர்ந்து ஊர்வலமாக ஆலயங்களுக்குத் திரும்பிக்கொண்டிருந்த அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் மற்றும் அக்கரைப்பற்று அருள்மிகு மருதடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயங்களின் அடியவர்கள் குறித்த தாகசாந்தி வைபவத்தில் பங்குகொண்டு தகிக்கும் மார்கழி வெயிலின் தாகம் தணித்துத் சென்றனர்.

தாகசாந்தி வைபவத்தைத் தொடர்ந்து ஆலய குரு சிவஸ்ரீ பிருந்துஜன் சர்மாவினால் ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தில் நிகழ்த்தப்பட்ட விசேட திருவாதிரைத் திருவிழா பூஜைகளுக்கு உபயகாரராக ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தகர் பாலசுந்தரம் தவசீலன் குடும்பத்தினர் ஏற்பாடுகளைச் செய்திருந்ததோடு பூஜை வழிபாடுகளில் பிரதேச செயலாளரோடு ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு விக்கினங்கள் தீர்க்கும் ஸ்ரீ மஹா கணபதிப் பெருமானின் பேரருளைப் பெற்றேகினர்.

திருவாதிரைத் திருவிழா பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து இன்று (11) மதியம் மாபெரும் அன்னதான வைபவமொன்று ஸ்ரீ மஹா கணபதி ஆலயத் திருப்பணிச்சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.















No comments: