ஆலையடிவேம்பு
பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகத்திடலானது
நேற்றையதினம் (09) எவ்வித முன்னனுமதியுமின்றி அடையாளம் தெரியாத சில விஷமிகளால்
சட்டவிரோதமான முறையில் திறந்துவிடப்பட்டதையடுத்து ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள
பல்லாயிரம் ஏக்கர் வேளாண்மைப் பயிர்ச்செய்கைக்கு அவசியமான தில்லையாற்று நீர் வீண் விரயமாகிக்
கடலோடு கலக்கும் நிலை உருவாகியுள்ளது.
குறித்த
செயல் நேற்று மாலை மண்டியவேளையில் சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகத்திடலில் ஆளரவமற்ற
சூழலில் இடம்பெற்றுள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச கடலோரப் பாதுகாப்பு அபிவிருத்தி
உத்தியோகத்தர் கே.எஸ்.பாபுஜி ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸனுக்கு அறிவித்திருந்தநிலையில்
அவர் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் செயலாளர் திருமதி. விஜயராணி கமலநாதனை உடனடியாகத்
தொடர்புகொண்டு கேட்டுக்கொண்டதற்கிணங்க பிரதேச சபைக்குச் சொந்தமான கனரக (JCB) வாகனத்தின்
உதவியோடு நன்னீர் கடலைச் சென்றடையாதவகையில் குறித்த ஆற்றுமுகத்திடலுக்கு மண் அணை
அமைக்கும் பணி இன்று (10) காலை முதல் இடம்பெற்று வருகின்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரது
மேற்பார்வையோடு இடம்பெறும் குறித்த மண்ணணை உருவாக்கும் முயற்சியானது காலை
தொடங்கிப் பலமணி நேரமாக முன்னெடுக்கப்படுகின்றநிலையில் ஆற்றின் நீரோட்டம் மிக
அதிகரித்துக் காணப்படுவதால் பணிகள் மிக வேகமாக
முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நாசகாரச்
செயல் குறித்து அங்கு கருத்துத் தெரிவித்த பிரதேச செயலாளர், ஆலையடிவேம்பு பிரதேசத்தில்
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பல்லாயிரம் ஏக்கர் பெரும்போக நெற்செய்கையானது
தென்மேல் பருவப்பெயற்சி மழை பொய்த்துள்ளநிலையில் பயிர்களெல்லாம் நீரின்றி வாடி,
கருகி அழியும் நிலை காணப்படும் இச்சந்தர்ப்பத்தில் அடையாளந்தெரியாத ஒருசில
நபர்களின் தான்தோன்றித்தனமான இந்நடவடிக்கையால் எத்தனையோ ஆயிரம் விவசாயிகள்
பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமது வயற்காணிகளுக்குப் பாய்ச்சுவதற்கு
நீரில்லாத நிலையில் மழையை நம்பியிருந்த விவசாயிகள் இந்நாட்களில் பல ஆயிரம்
ரூபாய்கள் பணத்தினைச் செலவழித்து கிட்டத்தட்ட கிலோமீட்டர் தொலைவுக்கு நீர்க்குழாய்
அமைப்புகளை ஏற்படுத்தி குறித்த தில்லையாற்று நீரைப் பம்புகளைப் பாவித்துப் பல
சிரமங்களுக்கு மத்தியில் தமது வயற்காணிகளுக்குப் பாய்ச்சி வருகின்றனர். இயற்கை
தங்களைக் கைவிட்டநிலையில் எமது ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் கோயில்கள் தோறும் மழை
வேண்டி யாகங்களையும் செய்துவருகின்றனர். அவர்களுக்கெல்லாம் இருக்கின்ற ஒரே
நம்பிக்கை இத் தில்லையாற்று நீரைத் தவிர வேறொன்றுமில்லை. இவ்வாறானதொரு சூழலிலேயே
சமுக அக்கறையற்ற ஒருசில விஷமிகள் இவ்வாறு தான்தோன்றித்தனமான செயலைச் செய்துள்ளனர்.
ஆற்றின் நீரோட்டம் அதிகரித்துள்ளநிலையில் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் உதவியோடு
நாம் மேற்கொள்ளும் மண் அணை அமைக்கும் பணி தற்போது மிகக் கடினமானதாக மாறியுள்ளது
எனக் குறிப்பிட்டதோடு, இச்செயலைப் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும்
அக்கரைப்பற்று பொலிசாரின் உதவியுடன் அவர்களுக்கெதிராக விரைந்து நடவடிக்கை
எடுப்பேன் எனவும் குறிப்பிட்டார்.
அவர்
அங்கு மேலும் கூறுகையில், இவ்வாறான விடயங்களில் பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட
தேவைகளை மட்டும் கருத்தில்கொண்டு செயற்படாமல் சமுக அக்கறையோடு சிந்தித்து இவ்வாறான
நாசகார வேலைகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக
அறிவித்து அவர்கள் மீது நடவடிக்கையெடுக்க உதவவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment