ஆலையடிவேம்பு பிரதேச செயலகமானது ஆலையடிவேம்பு பிரதேச சபையோடு இணைந்து ஏற்பாடு செய்திருந்த மாபெரும் சிரமதான நிகழ்வு இன்று (28) காலை 6.00
மணி தொடக்கம் பொத்துவில் வீதி, அக்கரைப்பற்று - 9 கிராம சேவகர் பிரிவிலுள்ள பொது
மயானத்தில் இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டுவரும் குறித்த
மயானம் மிக நீண்டகாலமாக எவ்வித துப்பரவுப் பணிகளும் இடம்பெறாத நிலையில் மரம்,
செடி, முட்புதர்கள்,
பற்றைக் காடுகள் மண்டியும், குப்பைகள் நிறைந்தும்
காணப்பட்ட நிலையில் அவற்றைத் துப்பரவு செய்து சுத்தப்படுத்திப் பாதுகாக்கும்
நோக்கோடு இடம்பெற்ற இச்சிரமதான நிகழ்வை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்
வி.ஜெகதீஸனும், ஆலையடிவேம்பு பிரதேச சபையின் செயலாளர் திருமதி. விஜயராணி
கமலநாதனும் இணைந்து ஆரம்பித்துவைத்திருந்தனர்.
'நாம் வசிக்கும் சுற்றுச் சூழலைத் தூய்மையாக வைத்திருப்போம்' எனும் தொனிப்பொருளோடு பிரதேச செயலாளரின் வழிகாட்டலின் துணையோடு ஆலையடிவேம்பு
பிரதேச செயலகத்தின் அக்கரைப்பற்று - 9 கிராம சேவகர் பிரிவுக்கான பொருளாதார
அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.இதயதினேஸினால் சிறப்பானவகையில் ஒழுங்கு
செய்யப்பட்டிருந்த குறித்த சிரமதானத்தில் ஆலையடிவேம்பு
பிரதேச சபைக்குச் சொந்தமான கனரக இயந்திரங்களைக் கொண்டு பற்றைக்காடுகள்
அழிக்கப்பட்டதோடு, குப்பை கூழங்கள் குறித்த மயானத்தின் ஒதுக்குப் புறமொன்றில்
பாரிய குழியொன்று தோண்டப்பட்டு புதைக்கப்பட்டன. சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக்
கழிவுகள் அங்கிருந்து கழிவுகள் சேகரிக்கும் உழவு இயந்திரத்தினைக் கொண்டு வேறிடத்துக்கு
மாற்றப்பட்டன.
காலை 11.00 மணிவரை இடம்பெற்ற இச்சிரமதானத்தில் ஆலையடிவேம்பு பிரதேச
செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் உத்தியோகத்தர்களுடன் ஆலையடிவேம்பு
பிரதேசத்தின் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலுமுள்ள கிராம அபிவிருத்திச் சங்க
உறுப்பினர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள், இராணுவத்தின்
241 ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள், அக்கரைப்பற்று பொலிஸ் உத்தியோகத்தர்கள்,
முதியோர் சங்க உறுப்பினர்கள், அக்கரைப்பற்று புனித மரியாள் தேவாலயம் சார்ந்த பங்கு
மக்கள், கிராமமட்ட அபிவிருத்திக் குழு அங்கத்தவர்கள், வர்த்தகர்கள், இதர பொதுமக்கள்,
அரசியல் பிரமுகர்கள் மற்றும் ‘அன்புத் தோழர்’ சமுக நல அமைப்பின் உறுப்பினர்கள் என
பெருமளவிலானோர் பங்குகொண்டு திட்டமிட்ட முறையில் சிரமதான வேலைகளைச் சிறப்பாகச்
செய்து முடித்தனர்.
பிரதேச
செயலாளரின் ஆலோசனையின் பேரில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.இதயதினேஸினால்
விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க அக்கரைப்பற்று, ஸ்ரீ இராம
கிருஷ்ணா தேசிய கல்லூரியில் கடந்த 1998 ஆம் வருடத்தில் சாதாரண தரம் பயின்ற
மற்றும் 2001 ஆம் வருடத்தில் உயர்தரம் கற்ற ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாழும்
இளைஞர்கள் மற்றும் மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளில் பணியாற்றிவரும் ஆலையடிவேம்பு பிரதேச
இளைஞர்களை அங்கத்தவர்களாகக் கொண்ட 'அன்புத் தோழர்’ சமுக நல அமைப்பு இந்நிகழ்வின் தாகசாந்திக்கான அனுசரணை மற்றும் மரநடுகைக்கான
மரக் கன்றுகளைக் கொள்வனவு செய்வதற்கான நிதி அனுசரணைகளை வழங்கி உதவி
புரிந்திருந்தனர்.
நிகழ்வின் இறுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரநடுகை நிகழ்வில் ஆலையடிவேம்பு
பிரதேச செயலாளர் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் செயலாளர் உள்ளிட்ட பதவிநிலை
உத்தியோகத்தர்களால் நீண்டகாலப் பயன்தரும் சுமார் 50 மரக்கன்றுகள் அம்மயான
எல்லையில் சமவிகித இடைவெளியில் தொடர்ச்சியாக நடப்பட்டன.
No comments:
Post a Comment