ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் அனுசரணையோடும் 'நாம் வசிக்கும் சுற்றுச் சூழலைத் தூய்மையாக வைத்திருப்போம்' எனும் தொனிப்பொருளோடும் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ள பொத்துவில் வீதி, அக்கரைப்பற்று - 9 கிராம சேவகர் பிரிவிலுள்ள
பொது மயானத்தைத் துப்பரவு செய்யும் சிரமதான நிகழ்வு நாளை மறுதினம் 28-10-2016,
வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி முதல் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆலையடிவேம்பு பிரதேச பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டுவரும் குறித்த
மயானமானது மிக நீண்டகாலமாக எவ்வித துப்பரவுப் பணிகளும் இடம்பெறாத நிலையில் மரம்,
செடி, முட்புதர்கள்,
பற்றைக் காடுகள், கற்கள் என்பனவற்றோடு குப்பைகளும் நிறைந்து
காணப்படும் தற்போதைய சூழலில் அவற்றை ஆலையடிவேம்பு பிரதேச சபைக்குச் சொந்தமான கனரக
இயந்திரங்களைக் கொண்டு வெட்டியகற்றவும், குப்பை கூழங்களை வேறிடங்களுக்கு மாற்றி
அம்மயானத்தைச் சுத்தப்படுத்திப் பாதுகாக்கும் நோக்கோடும் குறித்த சிரமதான நிகழ்வு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே இச்சிரமதான வைபவத்தில் கலந்துகொண்டு, அதனைத் திட்டமிட்டவாறு
சிறப்பாகச் செய்து முடிக்கும்வகையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தின் அனைத்து கிராம
சேவகர் பிரிவுகளிலுமுள்ள கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மாதர் சங்கங்கள், இளைஞர்
கழகங்கள், கிராமமட்ட அபிவிருத்திக் குழுக்கள், பொதுமக்கள் மற்றும் பரோபகாரிகள்
தங்களது பூரணமான ஒத்துழைப்புக்களை வழங்க முன்வருமாறு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால்
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், சிரமதானத்தில் கலந்துகொள்ள முன்வருவோர் தங்களால்
இயன்றளவு கத்தி, கோடரி, மண்வெட்டி, குப்பைவாரி, அலவாங்கு, பிக்காஸ், விளக்குமாறு
போன்ற உபகரணங்களையும் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
எதிர்வரும்
வெள்ளியன்று (28-10-2016) இடம்பெறவுள்ள
இச்சிரமதான வைபவத்துக்கான ஏற்பாடுகளை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரின்
வழிநடத்தலுடன் அக்கரைப்பற்று - 9 கிராம சேவகர் பிரிவுக்கான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்
வை.இதயதினேஸ் மேற்கொண்டுவருவதுடன், பிரதேச செயலாளரின் ஆலோசனையின் பேரில் அவரால் விடுக்கப்பட்ட
வேண்டுகோளுக்கிணங்க அக்கரைப்பற்று, ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய கல்லூரியில் கடந்த 1998
ஆம்
வருடத்தில் சாதாரண தரம் பயின்ற மற்றும் 2001 ஆம் வருடத்தில் உயர்தரம் கற்ற
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாழும் இளைஞர்கள் மற்றும் மத்திய கிழக்கு, ஐரோப்பிய
நாடுகளில் பணியாற்றிவரும் ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர்களை அங்கத்தவர்களாகக் கொண்ட 'அன்புத் தோழர்’ சமுக நல அமைப்பு
இந்நிகழ்விற்கான நிதி அனுசரணையினை வழங்க முன்வந்துள்ளமையும் இங்கு
குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment