ஆலையடிவேம்பு
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இவ்வருடத்திற்கான இரண்டாவது கூட்டம் அதன்
தலைவரும், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின்
இணைத் தலைவருமான கவிந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் இன்று (10) காலை ஆலையடிவேம்பு
பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு
பிரதேச செயலகத் திட்டமிடல் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில் மாவட்ட
அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரான ஏ.எம்.அப்துல் மஜீத், பிரதேச
செயலாளர் வி.ஜெகதீசன், உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், பிரதித் திட்டமிடல்
பணிப்பாளர் கே.பாக்கியராஜா, நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் உட்பட
ஆலையடிவேம்பு பிரதேச அரசியல் பிரமுகர்கள், அரச திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும்
அவர்களின் பிரதிநிதிகள், கமக்காரர் அமைப்பின் அங்கத்தவர்கள், பாடசாலை அதிபர்கள்,
மாதர் கிராம மற்றும் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், வர்த்தகர்கள், அரச
சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள், கமக்காரர்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள்
உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டம் மங்கல விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கத்தோடு
ஆரம்பித்துவைக்கப்பட்டது.
முதலில்
இடம்பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரது வரவேற்புரையைத் தொடர்ந்து அங்கு
உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன் ஒருங்கிணைப்புக் குழுக்
கூட்டத்தின் நோக்கங்கள் குறித்துப் பேசினார்.
அதனைத்
தொடர்ந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் இவ்வருடத்துக்காக
முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் சமகாலத்தில்
முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைகள் மற்றும் முடிவடைந்த வேலைகளோடு அவற்றுக்காகச்
செலவிடப்பட்டுள்ள நிதியின் அளவு என்பன தொடர்பாகப் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்
கே.பாக்கியராஜா அங்கு கூடியிருந்தோருக்குத் தெளிவுபடுத்தினார். அதனையடுத்து அரச
திணைக்களப் பிரதிநிதிகளுக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
இதன்போது
ஆலையடிவேம்பு பிரதேசப் பாடசாலை அதிபர்கள் தமது பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள்
தொடர்பாகவும், பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் பிரதேச வைத்திய அதிகாரி
அவ்வைத்தியசாலையில் தற்போது நிலவிவருகின்ற குறைபாடுகள் தொடர்பாகவும்
தெளிவுபடுத்தினர். அத்துடன் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும்
கொங்கிறீட் வீதி அபிவிருத்தி வேலைகள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சனைகள் தொடர்பில்
அங்கு கலந்தாலோசிக்கப்பட்டபோது ஒப்பந்தக்காரர்களின் தாமதப் போக்கினால் சில
வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் சொற்ப அளவோடு முடங்கிப்போயிருப்பதும், அதன்
காரணமாகப் பொதுமக்களின் உள்ளகப் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டிருப்பது
தொடர்பாகவும் அங்கு பிரஸ்தாபிக்கப்பட்டது. அதன்போது கருத்துத் தெரிவித்த
பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், காலதாமதத்தை ஏற்படுத்தும் அவ்வாறான
ஒப்பந்தக்காரர்களின் ஒப்பந்தங்களைப் பரிசீலித்து எதிர்வரும் மழைக்காலத்துக்கு
முன்னதாக அவ்வீதிகளைப் புனரமைக்க உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதேச
செயலாளரைப் பணித்தார்.
தொடர்ந்து
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மதத் தலங்களைப் புனரமைக்கும் பொருட்டு அரசிடமிருந்து
நிதியுதவிகளைப் பெற்றுள்ள 10 இந்துக்கோயில்களின் புனரமைப்புப் பணிகள்
தொடர்பாகவும், பனங்காடு கிராமத்துக்கு நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின்
குடிநீர் இணைப்புக்கள் இன்னும் பூரணமாக வழங்கப்படாமை குறித்தும் பொதுமக்களால்
அங்கு கேள்வி எழுப்பப்பட்டபோது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்
நிதியுதவிகளைப் பெற்றுள்ள கோயில்களுக்கு நேரடியாக விஜயம் செய்து அங்கு நடைபெறும்
புனரமைப்பு வேலைகளைப் பார்வையிடவுள்ளதாகவும், நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்
கீழ் பனங்காடு மற்றும் கண்ணகிகிராமத்துக்கு குடிநீர் இணைப்புக்களை விரைவில் வழங்க
50 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டதோடு, ஆலையடிவேம்பு
பிரதேசத்தில் அடைப்பெடுத்துள்ள வடிகான்கள் சுத்தப்படுத்தப்படாமையால் நிலவும்
சுகாதாரச் சீர்கேடுகள் தொடர்பாக ஆலையடிவேம்பு பிரதேச சபையின் செயலாளர் திருமதி.
விஜயராணி கமலநாதனிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த பிரதேச
சபையின் செயலாளர் ஆளணி மற்றும் கனரக இயந்திரங்களுக்கு நிலவும் பற்றாக்குறை
காரணமாகத் தம்மால் ஒரே நேரத்தில் எல்லா வடிகான்களையும் துப்பரவு செய்வதில் சிரமங்களை
எதிர்கொள்வதாகவும், மாரி மழைக்காலத்துக்கு முன்னர் படிப்படியாக அவற்றை முற்றாகத்
துப்பரவுசெய்து தரமுடியும் எனவும் அங்கு குறிப்பிட்டார்.
அடுத்து
கட்டாக்காலிகளாக வீதிகளில் அலைந்து திரியும் கால்நடைகளால் ஆலையடிவேம்பு
பிரதேசத்தில் அன்றாடம் இடம்பெற்றுவரும் வீதி விபத்துக்கள் மற்றும் மரணங்கள் தொடர்பாகப்
பிரஸ்தாபிக்கப்பட்டபோது கருத்துத் தெரிவித்த அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப்
பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜமீல், கடந்த காலங்களைப் போன்றே இப்பிரதேசத்தில்
கட்டாக்காலி மாடுகளைப் பிடித்து அவற்றின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
எடுப்பது தொடர்பாகத் தமது பொலிஸ் நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும்
வேலைத்திட்டங்கள் தொடர்பாக விளக்கியதோடு, தொடர்ச்சியாகத் தமது மாடுகளைப்
பராமரிக்காது வீதிகளில் அவர்கள் அலையவிடும் சந்தர்ப்பங்களில் நீதிமன்ற அனுமதியோடு
அவற்றை அரச உடைமையாக்கும் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டுவருவதாகவும் அங்கு
தெரிவித்தார்.
தொடர்ந்து
பொதுமக்கள் நெருக்கமாக வாழும் சூழல்களில் தமது வாழ்வாதாரமான கால்நடைகளைப் பண்ணை
அமைத்து வளர்ப்பதில் அவற்றின் உரிமையாளர்கள் எதிர்கொண்டுவரும் நெருக்கடிகளையும்,
அப் பண்ணைகளால் குறிப்பிட்ட சூழல்களில் ஏற்பட்டுள்ள சுகாதாரப் பிரச்சனைகள்
தொடர்பாகவும் ஆலையடிவேம்பு பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி எம்.ஐ.ரிஃப்கான்
கருத்துத் தெரிவித்ததோடு அப்பண்ணை உரிமையாளர்கள் வேறு பிரதேசங்களுக்குத் தமது
பண்ணைகளை இடம்மாற்றுவதில் அவர்களுக்கு இருக்கின்ற நிதி மற்றும் சட்டப்
பிரச்சனைகளுக்கு உதவ ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப்
பொறுப்பதிகாரியும் இணைந்து முன்வரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
No comments:
Post a Comment