கிழக்கு மாகாணசபையின் புதிய ஆளுந்தரப்பு உறுப்பினராக அண்மையில் பதவியேற்ற இனியபாரதி எனப்படும் கே.புஸ்பகுமார் அவர்களை வரவேற்று, ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி தொடர்பாகக் கலந்துரையாடும் நிகழ்வு இன்று (18) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் பங்குபற்றியதுடன், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக மாகாணசபை உறுப்பினர் கே.புஸ்பகுமார் சம்பிரதாய முறைப்படி மாலையிட்டு வரவேற்கப்பட்டதுடன், பிரதேச அபிவிருத்தி தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின்போது பிரதேச செயலாளர், வாழ்வின் எழுச்சி (திவிநெகும) அபிவிருத்தித் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களால் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய உட்கட்டுமான அபிவிருத்தி வேலைகள் தொடர்பான தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இதன்போது உரையாற்றிய மாகாணசபை உறுப்பினர் கே.புஸ்பகுமார், ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி தொடர்பில் தாம் சேவையாற்றத் தயாராவுள்ளதாகவும், அதற்கு மக்களின் ஒத்துழைப்பைப் பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டதோடு வறுமைக்கோட்டின்கீழ் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதே தற்போது தனக்குள்ள பெறும் சவாலாகும் எனவும் குறிப்பிட்ட அவர், இப்பிரதேசத்தில் குடிசைகளில் வாழுகின்ற வருமானம் குறைந்த மக்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment