பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ‘கிராமம் கிராமமாக – வீடு வீடாக’ எனும் கிராம மக்களுக்கான உபகார வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அளிக்கம்பையின் தேவகிராமம் மற்றும் சாந்திபுரம் கிராமங்களுக்கான நடமாடும் சேவையானது இன்று 07-04-2014, திங்கட்கிழமை அளிக்கம்பை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றது.
இந்நடமாடும் சேவையினை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் காலை 9.30 மணியளவில் தேசியக்கொடியேற்றி ஆரம்பித்துவைத்தார். அளிக்கம்பை புனித சவேரியார் தேவாலயத்தின் பங்குத்தந்தை அருட்திரு. ஜோசப் மேரியின் ஆசியுரையினைத் தொடர்ந்து அளிக்கம்பை கிராமசேவகர் பிரிவுக்கான கிராமசேவை உத்தியோகத்தர் கே.லோகநாதன் வரவேற்புரையாற்றினார். அடுத்து குறித்த கிராமசேவகர் பிரிவுக்கான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எல்.திருமுருகன் தனது பிரதேசம் தொடர்பான விளக்கவுரையினை வழங்கினார். அதன் பின்னர் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. திலகராணி கிருபராஜாவின் சிறப்புரையும் குறித்த நடமாடும் சேவையினை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும்முகமாக பிரதேச செயலாளரது ஆரம்ப உரையும் இடம்பெற்றன.
அதனைத்தொடர்ந்து கலை, கலாசார நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டதுடன் சாந்திபுரம் கிராமத்தின் அடிப்படை உட்கட்டுமான அபிவிருத்தியில் அளப்பரிய சேவையாற்றிக்கொண்டிருக்கும் பிரதேச செயலாளரை அக்கிராம மக்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தத்துடன், அளிக்கம்பை கிராமத்தில் 13 வருடங்கள் கிராம உத்தியோகத்தராக அளப்பரிய சேவையாற்றியவரும் தற்போது கிராம அலுவலர்களுக்கான நிருவாக உத்தியோகத்தராகக் கடமையாற்றுபவருமான ஈ.குலசேகரன் அளிக்கம்பையின் கிராமத்தலைவர் வி.விமல் தலைமையில் அக்கிராம மக்களால் பொன்னாடை போர்த்தியும் பாராட்டுப்பத்திரம் மற்றும் பரிசு வழங்கியும் கௌரவிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த பொதுமக்களுக்கான சேவைகள் ஆரம்பமாயின.
பி.ப. 4.00 மணிவரை நடைபெற்ற இந்நடமாடும் சேவையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்திப் பிரிவுக்கான உத்தியோகத்தர்களுடன் பொலிஸ் மற்றும் ஏனைய அரச பொதுத்துறை சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்று தேவகிராமம் மற்றும் சாந்திபுரம் பொதுமக்களுக்கான சேவைகளை வழங்கினர். அதேபோன்று குறிப்பிட்ட கிராமங்களிலிருந்து பெருமளவிலான மக்களும் திரண்டுவந்து தமக்கான சேவைகளை இங்கு பெற்றுக்கொண்டனர்.
மேலும் கிராமத்திற்குக் கிராமம் நடமாடும் சேவைகளின் இறுதி நிகழ்வாக அக்கரைப்பற்று – 7/2 கிராமத்துக்கான அடுத்த நடமாடும் சேவையானது எதிர்வரும் 08-04-2014, செவ்வாய்க்கிழமை (அதாவது நாளை) அக்கரைப்பற்று – 7/2, சுவாமி விபுலானந்தா மாணவர் இல்லத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment