- பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ‘கிராமம் கிராமமாக – வீடு வீடாக’ எனும் கிராம மக்களுக்கான உபகார வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இறுதியானதும் அக்கரைப்பற்று – 7/2 கிராமசேவகர் பிரிவுக்கானதுமான நடமாடும் சேவை இன்று 08-04-2014, செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று – 7/2, சுவாமி விபுலானந்தா மாணவர் இல்லத்தில் நடைபெற்றது.
கடந்த நாட்களைப்போன்றே இந்நடமாடும் சேவையினையும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் காலை 9.00 மணியளவில் தேசியக்கொடியேற்றி ஆரம்பித்துவைத்தார். இறைவணக்கத்தின் பின்னர் சின்னமுகத்துவாரம் கிராமசேவகர் பிரிவுக்கான கிராமசேவை உத்தியோகத்தர் பி.திருநாவுக்கரசு வரவேற்புரையாற்றியதைத் தொடர்ந்து அக்கிராமசேவகர் பிரிவுக்கான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.முரளிதர்ஷன் தனது பிரதேசம் தொடர்பான விளக்கவுரையினை வழங்கினார். அதன் பின்னர் குறித்த நடமாடும் சேவையினை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும்முகமாக பிரதேச செயலாளரது ஆரம்ப உரை இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து மேடையேற்றப்பட்ட கலை, கலாசார நிகழ்வுகளில் தமது திறமைகளை வெளிப்படுத்திய சிறார்களுக்குப் பிரதேச செயலாளர், கிராமசேவை உத்தியோகத்தர், மேலதிக மாவட்டப் பதிவாளர், பிரதம முகாமைத்துவ உதவியாளர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் பரிசுகளை வழங்கிவைத்தார்கள்.
இந்நடமாடும் சேவையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்திப் பிரிவுக்கான உத்தியோகத்தர்களுடன் பொலிஸ் மற்றும் ஏனைய அரச பொதுத்துறை சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்று அக்கரைப்பற்று – 7/2 கிராமசேவகர் பிரிவுப் பொதுமக்களுக்கான சேவைகளை வழங்கினர்.
மேலும், கடந்த 24-02-2014 முதல் இன்றுவரையான காலப்பகுதியில் எமது ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 22 கிராமசேவகர் பிரிவுகளிலும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட நடமாடும் சேவைகளில் இப்பிரதேச மக்களின் சேவைக்காகச் சகல வழிகளிலும் தம்மை அர்ப்பணித்துச் சேவையாற்றிய ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஏனைய அரச பொதுத்துறை சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், கிராமிய மற்றும் மகளிர் கிராமிய அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், திவிநெகும (சமுர்த்தி) திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச இளைஞர் கழக உறுப்பினர்கள் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்கள் அனைவருக்கும் பிரதேச செயலாளரின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Sunday, 13 April 2014
அக்கரைப்பற்று – 7/2 கிராமசேவகர் பிரிவில் இடம்பெற்ற நடமாடும் சேவை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment