Tuesday, October 15, 2013
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற செயலமர்வு
(உ.உதயகாந்த்)
அக்கரைப்பற்றிலுள்ள அரசுசாரா அமைப்பான பாதிப்புற்ற பெண்கள்
அரங்கம் (AWF) நிறுவனத்தினால் அம்பாறை மாவட்டத்தின் 10 பிரதேச செயலகப்பிரிவுகளில் செயற்படுத்தப்படவுள்ள
பெண்களுக்கெதிரான வன்முறைகளை தடுப்பதற்கும் கையாள்வதற்குமான ஒரு வினைத்திறன்மிக்க செயலணியினை
உருவாக்குதல் தொடர்பான செயலமர்வு கடந்த 08.10.2013, செவ்வாய்க்கிழமை காலை 10.00
மணிக்கு பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் இணைப்பாளர் வாணி சைமன் அவர்களது
தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் நவரெட்ணராஜா கலையரங்கில் நடைபெற்றது.
இச்செயலமர்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம்
ஜெகதீசன் உட்பட அம்பாறை மாவட்டத்தின் குறிப்பிட்ட 10 பிரதேச செயலகப்பிரிவுகளிலும்
பெண்கள் மற்றும் சிறுவர்கள் உரிமைகள், பாதுகாப்பு, நலனோம்பல் மற்றும் அபிவிருத்தி
வேலைத்திட்டங்களில் பணியாற்றும் அரச, அரசுசாரா அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலர்
கலந்துகொண்டனர்.
தொடக்கத்தில் வரவேற்புரையும் இச்செயலணி அமைக்கப்படுவதன்
நோக்கமும் அதன் தேவையும் தொடர்பான தெளிவுபடுத்தலானது பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் இணைப்பாளரால்
மேற்கொள்ளப்பட்டது. அடுத்ததாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரின் சிறப்புரையும்
அதனைத்தொடர்ந்து கடந்த 2004 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில்
சிறப்பாகச் செயற்பட்டுவரும் இச்செயலணி தொடர்பாக ஒக்ஸ்பாம் நிறுவனத்தின் பால்நிலை
அபிவிருத்தித்திட்ட இணைப்பாளர் திருமதி.இராஜலெட்சுமி கந்தையா அவர்களது விவரணம்
இடம்பெற்றது.
அம்பாறை மாவட்டத்தில் இதுபோன்றதொரு செயலணி அமைக்கப்படுவதன்
அவசியம் தொடர்பாகப் பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தினரால் கடந்த காலங்களில்
மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் கிடைக்கப்பெற்ற பெண்களுக்கெதிரான பால்நிலை
அடிப்படையிலான வன்முறைகள் பற்றிய தகவல்கள் அந்நிறுவனத்தின் கள உத்தியோகத்தர்
திருமதி.சுகிர்தினி கௌரீஸ்வரன் அவர்களால் தொகுத்தளிக்கப்பட்டது.
அடுத்து மேற்படி செயலணிக்குழுவின் ஆலோசகரான ஒக்ஸ்பாம்
நிறுவனத்தின் பணியாளர் திருமதி.வாசுகி ஜெய்சங்கர் தலைமையில், பங்குபற்றிய
அமைப்புக்களூடான இணைந்த செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் நடாத்தப்பட்டு
முடிவுகள் பெறப்பட்டன.
இறுதியாக பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் நிருவாக
உத்தியோகத்தர் திருமதி.அன்னலெட்சுமி கோபாலபிள்ளையின் நன்றியுரையுடன் செயலமர்வு
நிறைவுற்றது.