இராம கிருஸ்ண மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மாணவர் கௌரவிப்பு நிகழ்வு.
(உ.உதயகாந்த்)
இவ்வருடம் இடம்பெற்ற தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சையில்
வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்த மாணவர்களைக்
கௌரவித்து சான்றிதழ் வழங்கும் வைபவம் கடந்த 21.10.2013, திங்கட்கிழமை காலை
அக்கரைப்பற்று, இராம கிருஸ்ண மத்திய மகா வித்தியாலயத்தில் விழாக்குழுத் தலைவர் டபிளியூ.ஜி.ஏ.சுமித்
தீப்திகுமார தலைமையில் இடம்பெற்றது.
இவ்விழாவிற்கு அதிதிகளாக திருக்கோவில் வலயக்கல்விப்
பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன், அக்கரைப்பற்று
மக்கள் வங்கி முகாமையாளர் நசீர், நீத்தை பிரதேச இராணுவ கமாண்டர் கேணல்.நெவில்
பெரேரா, ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப் பணிப்பாளர் வீ.குணாளன், சிரேஷ்ட
முகாமைத்துவ உதவியாளர் ஆர்.கேந்திரமூர்த்தி, கிராமசேவை உத்தியோகத்தர்
பீ.ஹிரிசாந்த், அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய கல்லூரி அதிபர்
எம்.கிருபைராஜா, இராம கிருஸ்ண மத்திய மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர்
பீ.கோபாலபிள்ளை மற்றும் தற்போதைய அதிபர் திருமதி.எல்.கோபாலபிள்ளை ஆகியோர் கலந்து
சிறப்பித்தனர்.
சித்திபெற்ற மாணவர்களும் அதிதிகளும் குறித்த பாடசாலையின்
ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களால் அம்பாறை வீதியிலிருந்து பாண்ட் வாத்திய இசையுடன்
ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு, தேசிய கொடியேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தொடக்க
நிகழ்வுகளாக மங்கல விளக்கேற்றலும் வித்தியாலய கீதமும் இசைக்கப்பட்டன.
தலைமையுரை, வரவேற்புரைகளைத் தொடர்ந்து அதிதிகள் உரைகள்
இடம்பெற்றதோடு பாடசாலை மாணவர்களால் மேடையேற்றப்பட்ட கலைநிகழ்ச்சிகள் இவ்விழாவில்
சிறப்பிடம் பெற்றிருந்தன. இவற்றின் முடிவில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவித்து
சான்றிதழ் வழங்கும் மற்றும் பரிசில்கள் வழங்கும் வைபவம் என்பன இடம்பெற்றன.
இம்முறை இப்பாடசாலையில் 26 மாணவர்கள் புலமைப்பரிசில்
பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெறுபேறுகளைப் பெற்று
சித்தியடைந்திருந்ததுடன், இவர்களில் ஏ.கிஷோமிக்கா என்ற மாணவி 180 புள்ளிகளைப்
பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றிருந்தார்.
கடந்த வருடம் இப்பாடசாலையில் 30 மாணவர்கள் புலமைப்பரிசில்
பரீட்சையில் சித்தியடைந்திருந்தபோதிலும் இவ்வருடம் 26 மாணவர்கள்
சித்தியடைந்தமைக்கு அம்பாறை மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளி இம்முறை 154 ஆக
உயர்த்தப்பட்டமையே காரணமென்றும், கடந்தமுறை வெட்டுப்புள்ளியானது 147 ஆக
இருந்ததாகவும் இவ்விழாவில் உரையாற்றிய திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர்
தெரிவித்தார்.
நிகழ்வின் இறுதியில் மாணவர்களின் வெற்றிக்காய்
அரும்பாடுபட்ட ஆசிரியர் எஸ்.கிருசாந்தன் அவர்கள் பொன்னாடை போர்த்தப்பட்டும்
பரிசுகள் வழங்கப்பட்டும் வாழ்த்தி கௌரவிக்கப்பட்டார்.
No comments:
Post a Comment