Thursday, 19 August 2021

பணியிலிருந்து விலகிக் கொண்டார்.





அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் யு.எல்.எம்.சகீல் பொதுமகன் ஒருவரால் தாக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்பின்மை காரணமாக இன்று(18) அவர் பணியிலிருந்து விலகிக் கொண்டார்.

இதனால் சிகிச்சைக்காக அங்கு சென்ற பலர் இன்று ஏமாற்றதுடன் வீடு திரும்பினர். இதேநேரம் கொரோனா உச்சத்தின் மத்தியிலும் மக்களுக்கு சிறந்த சேவையாற்றிவரும் குறித்த வைத்தியருக்கு ஏற்பட்ட நிலை தொடர்பில் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவும் ஆலையடிவேம்பு பிரதேச பொதுமக்களும் கவலை அடைந்துள்ளதுடன் சம்பவத்திற்கு எதிராக பலத்த கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று(17) நடைபெற்ற நிலையில் சம்மந்தப்பட்டவர்கெதிராக உச்ச நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொலிசாரை கேட்டுக்கொண்டனர்.

நேற்று பிற்பகல் அலிக்கம்பை கிராமத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த கணவன் மனைவி இருவரும் பனங்காடு வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்துள்ளனர்.
இந்நிலையில் உடனடி சிகிச்சை அளித்த வைத்தியர் சன்னங்கள் காயங்களுக்குள் உள்ளதால் மேலதிக சிகிச்சைக்காக காயமடைந்தவரை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

ஆயினும் காயமடைந்தவர்களை அழைத்து வந்த இன்னுமொருவர் அவர்களை மாற்ற கூடாது என்றும் உம்மால் சிகிச்சை அளிக்க முடியாத என்றும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் வைத்தியரையும் கடமையிலிருந்த தாதி உள்ளிட்ட சிலரையும் தாக்கியுள்ளார். இதன்போது அங்கிருந்த அம்புலன்ஸ் சாரதி உள்ளிட்டவர்களால் வைத்தியர் பாதுகாக்கப்பட்டுள்ளதுடன் பொலிசாருக்கு தகவலை வழங்கி உள்ளனர்.

இந்நிலையில் அங்கு விரைந்த பொலிசார் குறித்த நபரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன் காயமடைந்தவர்களை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதனிடையே குறித்த வைத்தியசாலையில் தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை என தெரிவித்தும் இன்று வைத்தியர் வைத்தியசாலைக்கு சமூகமளிக்கவில்லை. இதனால் சிகிச்சைக்காக அங்கு கைக்குழந்தைகளுடனும் நோயுடனும் தூரப்பிரதேசங்களில் இருந்து சென்ற பலர் இன்று ஏமாற்றதுடன் வீடு திரும்பினர்.

ஆயினும்; இத்தாக்குதல் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இல்லாமை காரணமாகவே நடைபெற்றுள்ளதாகவும் வைத்தியசாலைக்கு தேவையான பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நியமித்து தருமாறும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவினரும் பொதுமக்களும் உயர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டனர்.

மேலும் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தனர்.

haran

No comments: