அக்கரைப்பற்று இராம கிருஸ்ண மிசன் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் விசேட தேவையுடைய மாணவர்களுக்குத் தனவந்தர் ஒருவரினால் பாடசாலைப் பாதணிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் இன்று (11) காலை நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.இதயதினேஸின் வேண்டுகோளுக்கிணங்க ஒழுங்குசெய்யப்பட்ட இந்நிகழ்வில் அவரது நண்பரும், ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள கோளாவில் கிராமத்தினைப் பிறப்பிடமாகவும் தற்போது ஜேர்மனியில் குடியுரிமை பெற்று அந்நாட்டின் Braunenstr நகரில் வசிப்பவரும், Aalen நகரில் தொழில்புரிபவருமாகிய தில்லைநாயகம் முரளிதாசன் என்ற தனவந்தரால் குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் 17 விசேட தேவையுடைய மாணவ மாணவிகளுக்கு இவ்வன்பளிப்புகள் வழங்கிவைக்கப்பட்டன.
இவ்வைபவத்தில் குறித்த பாடசாலை அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம், விசேட தேவையுடைய மாணவர் பிரிவின் பொறுப்பாசிரியர் வி.தயாநிதி, ஆசிரியை பி.தீபரேகா மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரின் வெகுஜனத் தொடர்பு உத்தியோகத்தர் எஸ்.ஜே.பிரேம் ஆனந்த் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது உரையாற்றிய பாடசாலை அதிபர், குறித்த தனவந்தரின் மனிதாபிமான உதவிக்கு நன்றி தெரிவித்ததுடன், இவ்வுதவியைத் தமது மாணவர்கள் பெற்றுக்கொள்வதற்குக் காரணமாக இருந்த பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.இதயதினேஸ் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்தார். அதேபோன்று விசேட தேவையுடைய மாணவர் பிரிவின் பொறுப்பாசிரியர் வி.தயாநிதி தனது உரையில், குறித்த பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரது முயற்சியில் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் ஒரு தனவந்தரால் கடந்த வருடமும் இதேபோன்றதொரு நிகழ்வில் தமது மாணவர்களுக்குப் பாடசாலைக் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டதை நன்றியோடு நினைவுகூர்ந்தார்.