கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.புஸ்பகுமாரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின்கீழ் கிழக்கு மாகாண சமுக சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையூடாக ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வறுமைக்கோட்டின்கீழ் குடிசை வீடுகளில் வாழும் குடும்பங்களுக்கு அவ்வீடுகளுக்கு மாற்றீடாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் கல்வீடுகளை அமைத்துக்கொடுக்கும் வேலைத்திட்டத்தினை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கும் வகையில் தெரிவுசெய்யப்பட்ட முதல் 10 வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வுகள் கடந்த புதன்கிழமை (03) காலை இடம்பெற்றன.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனின் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவங்களுக்குப் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.புஸ்பகுமார் கலந்துகொண்டார். கௌரவ அதிதியாகக் கிழக்கு மாகாண சமுக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் கே.குணநாதனும், சிறப்பு அதிதிகளாக அம்பாறை மாவட்ட சமுக சேவைகள் உத்தியோகத்தர் எம்.சி.சம்சுதீன், ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எம்.எம்.அமீன், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாச, கிராம உத்தியோகத்தர் ஏ.சுபராஜ் மற்றும் திவிநெகும பிரிவின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரி.பரமானந்தம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது வாச்சிக்குடா, கோளாவில் ஆகிய கிராமங்களில் புதிய கல்வீடுகளை அமைப்பதற்கான அடிக்கற்கள் அதிதிகளால் நட்டுவைக்கப்பட்டன. இந்நிகழ்வுகளில் உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் கே.புஸ்பகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் என்ற வகையில் அரசினால் தனக்கு ஒதுக்கப்பட்ட 30 இலட்சம் ரூபாய் நிதியில் தற்போது அமைக்கப்பட்டுவரும் இவ்வீடுகளுக்கு தலா ஐம்பதாயிரம் வீதம் தன்னால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நிதி குறித்த வீடுகளைப் பூரணமாக அமைத்து முடிப்பதற்குப் போதுமானதாக இல்லாதுவிடினும் காலாகாலமாக குடிசைகளில் வசிக்கின்ற வறுமைக்கோட்டின்கீழ் வாழும் குடும்பங்களின் பெரும் கனவான கல்வீடு என்ற ஆசையினை நிறைவேற்றும் முதல் அடியை இவ்வேலைத்திட்டத்தினூடாகத் தான் எடுத்துவைத்துள்ளதாகவும் அங்கு தெரிவித்தார்.
No comments:
Post a Comment