யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரகாஷ் ஞானபிரகாசம், கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார். இறக்கும் போது வயது 26
கொடிகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
விசேட தேவையுடையவரான பிரகாஷ் ஞானபிரகாசம், சமூக வலைத்தளங்களில் செய்திகளை பகிர்ந்து, மக்களுக்கு விரைவாக செய்திகளை வழங்கும் ஒரு செய்தியாளராக திகழ்ந்தார்.
தனது சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட பிரகாஷ் ஞானபிரகாசம், காணாமல் போனோர், அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற போராட்டங்களிலும் கலந்துக்கொண்டு, தமிழ் மக்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்த்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த ஐந்து தினங்களாக தனக்கு தலைவலி இருமல், காய்ச்சல் காணப்பட்டதை அடுத்து, தான் செப்டெம்பர் (01) அன்டிஜன் பரிசோதனை செய்ததாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டிருந்தார்.
இந்த பரிசோதனையில் தனக்கு கொவிட் தொற்று உறுதியாகியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
குணமடைந்த பின்னர் தடையின்றி, எனது பணிகள் தொடரும்… அதுவரை காத்திருங்கள் என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, வைத்தியசாலைக்கு சென்ற பிரகாஷ் ஞானபிரகாசம், இறையடி எய்தினார்.
No comments:
Post a Comment