ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கலாசார பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கலைஞர் சுவதம் 2018' கௌரவிப்பு நிகழ்வுக்கு அமைவாக ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சார்ந்த பல்துறைக்கலைஞர்கள் 10 பேர் தெரிவுசெய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு இடம்பெற்ற இந்நிகழ்வில், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையிலான பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள் இணைந்து கலைஞர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, அவர்களின் சுக நலம் விசாரித்து விருதுகளையும் சான்றிதழ் மற்றும் பரிசுப்பொதிகளையும் வழங்கி வைத்தனர்.
நாட்டுக்கூத்து கலைஞர் அண்ணாவியார் கணபதிப்பிள்ளை பாக்கியராஜா, நாட்டுக்கூத்து மற்றும் மத்தள வாத்தியக் கலைஞர் வேலாயுதன் தாமோதரம், சித்திரப்பாட ஆசான் யோகேஸ்வரி பிரபுகுமார், கவிஞர் மாரிமுத்து யோகராஜா, ஊடகம், இசை, அறிவிப்பாளர் மற்றும் சமூகப்பணிகளுக்காக விஜயராஜா சுகிர்தகுமார், ஓவியக்கலைக்காக ஆசிரியர் தம்பிப்பிள்ளை அல்லிராஜா, ஓவியம் மற்றும் அழகியற்கல்வி மேம்பாட்டுக்காக உதவிக் கல்விப் பணிப்பாளர் சுந்தரம் சிறிதரன், ஊடகத்துக்காக இரத்தினம் நடராஜா, தோல்வாத்தியக்கலைக்காக தாமோதரம் உதயகுமார், கூத்து கலைக்காக வெள்ளக்குட்டி ஞானமுத்து உள்ளிட்டவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையிலான பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள் கலைஞர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று கலைஞர்களுடைய உறவினர்களுடன் நட்புறவு ரீதியில் உரையாடியதுடன், கலைஞர்களின் நலம் தொடர்பிலும் விசாரித்து அறிந்து கொண்டனர். பின்னர் அவர்கள் சமூகத்துக்காக ஆற்றிய பணிகள் தொடர்பிலும் பாராட்டிப் பேசியதுடன் நினைவுச் சின்னத்தினையும் வழங்கி வைத்தனர்.
தொடர்ந்து கலைஞர்களின் ஏற்புரையும் இடம்பெற்றது.
இதுபோன்ற கௌரவிப்புகள் பல இடம்பெற்றாலும் கலைஞர்களின் வீடுகளுக்கு சென்று கௌரவிக்கும் முதல் நிகழ்வாக இந்நிகழ்வு, ஆலையடிவேம்பில் நடைபெறுவது தொடர்பில் மகிழ்ச்சியை வெளியிட்ட கலைஞர்கள் கௌரவிப்பு தொடர்பில் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்
No comments:
Post a Comment