Saturday, 31 December 2016

ஆண்டிறுதி விழா

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கடமையாற்றி இவ்வருடத்தில் (2016) இடமாற்றம் பெற்று வேறு அரச அலுவலகங்களுக்குச் சென்ற மற்றும் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்களின் சேவைகளைக் கௌரவிக்கும் நிகழ்வும் ஆண்டிறுதி விழாவும் இன்று (31) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.


பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வுகளை அதன் தலைவரும் பிரதேச செயலாளருமான வி.ஜெகதீஸன் தலைமைதாங்கி நடாத்தினார்.

மங்கல விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கத்தோடு ஆரம்பமான வைபவங்களை பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் செயலாளரும் மேலதிக மாவட்டப் பதிவாளருமான எம்.பிரதீப் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.சுகிர்தகுமார் ஆகியோர் தொகுத்து வழங்கினர். முதலில் பிரதேச செயலாளரின் தலைமையுரையும், அதனைத் தொடர்ந்து கரோக்கி இசை வடிவிலமைந்த இன்னிசை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் உள்ளிட்ட செயலக உத்தியோகத்தர்களோடு, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இசைத்துறையில் வளர்ந்துவரும் இளம் கலைஞர்களின் பாடல், நடன நிகழ்வுகளும் பாடசாலை சிறுமியரின் அழகிய நடன நிகழ்வும் இடம்பெற்றிருந்தன.

இதன்போது இவ்வருடம் இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கலாபூஷணம் விருது பெற்ற இசைக் கலைஞரும் ஓய்வுபெற்ற அதிபருமான ஜனாப். செய்யது அப்துல் காதர் முகம்மது அஷ்ரப் அவர்கள் இன, மத பேதமற்று அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசங்களில் பல வருடங்களாக ஆற்றிவரும் இசைப் பணிகளைப் பாராட்டி பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸனால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கடமையாற்றி இவ்வருடத்தில் (2016) வேறு அரச அலுவலகங்களுக்கு இடமாற்றம் பெற்றுச்சென்ற 12 தமிழ், முஸ்லிம் உத்தியோகத்தர்கள் வாழ்த்துப்பா மற்றும் நினைவுப்பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களின் ஏற்புரைகளும், அதிதிகளின் உரைகளும், சிற்றுண்டி மற்றும் மதியபோசன விருந்துபசாரம் என்பனவும் அங்கு இடம்பெற்றிருந்தன.

இந்நிகழ்வுகளில் பிரதேச செயலாளரின் தலைமையில் உதவி பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களும் அனைத்து பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

No comments: