Thursday, 29 May 2014

பயிலுனர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

எஸ்.ரி.ஏ சொலிடரிட்டி பவுண்டேசன் அமைப்பின் நிதி உதவியில் ஆலையடிவேம்பு பிரதேசத்தின் கோளாவில் கிராமத்திலுள்ள அம்மன் சமுக அபிவிருத்தி நிறுவனத்தினூடாக தேசிய பயிலுனர் கைத்தொழிற்பயிற்சி அதிகாரசபையின் (NAITA) கண்காணிப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்ட தையல் மற்றும் முன்பள்ளிக் கற்பித்தல் பயிற்சிகளைப் பூரணமாக நிறைவுசெய்த பெண் பயிலுனர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு எஸ்.ரி.ஏ சொலிடரிட்டி பவுண்டேசன் அமைப்பின் திட்டப்பணிப்பாளர் வி.வாமதேவன் தலைமையில் கோளாவில், சாகாம வீதியிலுள்ள அம்மன் மகளிர் இல்லத்தில் நேற்று, 12-05-2014 திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், அக்கரைப்பற்று நன்னடத்தை அலகுக் காரியாலய தலைமை உத்தியோகத்தர் எம்.ஏ.ஏ.வசூர்தீன், தேசிய பயிலுனர் கைத்தொழிற்பயிற்சி அதிகாரசபையின் மாவட்ட அலுவலகப் பரிசோதகர் கே.பத்மநாதன், பிரதேச செயலாளரது வெகுஜன தொடர்பு உத்தியோகத்தர் எஸ்.ஜே.பிரேம் ஆனந்த், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாஸ, சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் வி.திவ்வியமூர்த்தி, சிறுவர் நன்னடத்தை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.பி.ஏ.வஸீம், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன், ஆசிரியர் எஸ்.மணிவண்ணன் ஆகியோருடன் அம்மன் மகளிர் இல்ல முகாமையாளர், பயிலுனர்கள் மற்றும் இல்லப் பிள்ளைகளும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின்போது ஒருவருட தையல் பயிற்சியைப் பூர்த்திசெய்த 26 யுவதிகளுக்கும், முன்பள்ளி கற்பித்தல் பயிற்சியை பூர்த்தி செய்த 5 யுவதிகளுக்கும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிதிகளால் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் குறித்த மகளிர் இல்ல மாணவிகளின் கலை, கலாசார, நடன வைபவங்களும் இடம்பெற்றன.

மேலும் இந்நிகழ்வோடிணைந்தவகையில் அம்மன் மகளிர் இல்லத்தினால் பராமரிக்கப்பட்டு, உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள புவிதா என்ற மாணவிக்கு அவரது கல்வியைத் தொடர்வதற்கான வங்கி வைப்பும், பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் க.பொ.த.(சா/த) பரீட்சையில் சித்தியடைந்த அவ்வில்ல மாணவிகளுக்கும், கலை நிகழ்வுகளில் கலந்துகொண்ட மாணவிகளுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு வருகைதந்த அதிதிகளால் மேலும் வினைத்திறனுடனான வகையில் தொழிற்பயிற்சித் திட்டங்களை அங்கு தொடர்ந்து முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டதுடன் தையல் பயிற்சியை நிறைவுசெய்த யுவதிகளால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: