Pages

Saturday 4 January 2020

பெண் ஊழியருக்கு ஓங்கி அறைந்த சம்பவம்-நடந்தது என்ன?

பெண் ஊழியருக்கு ஓங்கி அறைந்த சம்பவம்-நடந்தது என்ன?
(பாறுக் ஷிஹான்)
பெண் உத்தியோகத்தருக்கு அவரது தலைமை உத்தியோகத்தரான ஐ.எல்.எ காலிர்க் .  அறைந்த சம்பவத்தால்அம்பாறை மாவட்டத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.





இச்சம்பவம் நிந்தவூரில் கடந்த புதனன்று 1 ஆம் திகதியன்று நண்பகல் இடம்பெற்றுள்ளதுடன் நிந்தவூர் கமநல கேந்திரமத்திய நிலையத்தில் பணியாற்றும் நிலைய முகாமைத்துவ உதவியாளர் திருமதி தவப்பிரியா சுபராஜ்(வயது34) என்பவரே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இவ்வாறு தாக்குதலுக்குள்ளான பெண்ணை அந்நிலையத்தின் தலைமை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.எ காலிர்க்  கன்னத்தில் ஓங்கி அறைந்த சம்பவமே ஒருவிதமான பதட்டத்தையும் தோற்றுவித்துள்ளது.

நாவிதன்வெளி சவளக்கடையைச் சேர்ந்த குறித்த பெண் உத்தியோகத்தர் அண்மையில் திருமணமானவர். தச்சுத்தொழில்புரியும் சுபராஜ் என்பவரை திருமணம்செய்து சங்கீத் எனும் 1வயதுப் பிள்ளையும் உண்டு.இது தொடர்பாக சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் அன்று மாலை 5 மணியளவில் பாதிக்கப்பட்ட பெண் உத்தியோகத்தரால் முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர் வலி தாங்கமுடியாது கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்முனைஆதாரவைத்தியசாலையின் பெண்கள் விடுதி 3 இல் 17ஆம் இலக்க கட்டிலில் 3 ஆவது நாளாக சிகிச்சை பெற்றுவரும் தவப்பிரியா கருத்து தெரிவிக்கையில்

முதலாந்திகதியன்று புத்துணர்ச்சியுடன் கடமைக்கு காலையில் சமுகமளித்திருந்தேன். ஜனாதிபதியின் பணிப்புரைக்கிணங்க காலை 9.02க்கு நடைபெறவேண்டிய அரச ஊழியர்களின் புத்தாண்டு உறுதியுரை காலையில் நடைபெறவில்லை.

நண்பகலைத் தாண்டி ஒரு மணியளவில் உறுதியுரை வைபவத்திற்காக எமது நிலையத்தலைவர் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எங்களை அழைத்தார்.

நாம் முகாமைத்துவ உதவியாளர்களாக கடந்த 5 வருடங்களாக சேவையாற்றி வருகிறோம். அவர் அழைத்ததும் மகிழ்ச்சியுடன் சென்றோம்.
ஆனால் அங்கு தேசியக்கொடி ஏற்றப்படவில்லை. தேசிய கீதம் இசைக்கப்படவில்லை. மௌன அஞ்சலி செலுத்தப்படவில்லை. உறுதியுரை கூட வாசிக்கப்படவில்லை.

எங்களை நிறுத்தி வைத்து புகைப்படத்திற்காக கையை நீட்டி வாயை அசையுங்கள் என்றார். படம் எடுத்தார்கள். பின்பு மறுபக்கத்தால் படம் எடுப்பதற்காக வாயை அசையுங்கள். என்றார் எங்களுக்கு சிரிப்பு வந்துவிட்டது. சிரித்தோம்.மறுகணம் அவர் பாய்ந்து வந்து எனது கன்னத்தில் ஓங்கி அறைந்தார். ஏனையோர் முன்னிலையில் பெண்ணான எனக்கு அறைந்தது பாரிய அவமானத்தை ஏற்படுத்தியது மாத்திரமல்லாமல் பாரிய வலியும் ஏற்ப்பட்டது. செவிப்பறை வெடித்துவிட்டதாக உணர்ந்தேன்.

எனக்கு அழுகை வந்துவிட்டது. அழுது அழுது இருந்தேன். அதற்கிடையில் யாரோ எனது கணவருக்கு அறிவிக்க அவரும் வந்து பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார்.ஆத்திரப்பட்டார். ஆனால் எதுவுமே கேட்காமல் என்னை நேராக சம்மாந்துறைப் பொலிசுக்குக் கூட்டிக்கொண்டுபோய் முறைப்பாடு செய்தார். அப்படியே வந்து கல்முனை ஆதாரவைத்தியசாலையில் அனுமதித்தார்.

எனக்கு தற்போதும் அப்பகுதி கடுப்பாக இருக்கிறது. இடையிடையே தலைவலி தலைச்சுற்று மயக்கம் வருகிறது. பால்குடி மறவாத எனது குழந்தைக்கு பால்கொடுக்கமுடியாது புத்தாண்டில் ஆஸ்பத்திரியில் வந்து படுத்துக்கிடக்கிறேன். வேதனையாகவுள்ளது

மேலும் சம்மாந்துறைப் பொலிஸ் ஒருவர் எமது அலுவலகத்திற்கு வந்து எம்முடன் பணியாற்றுகின்ற ஒரு உத்தியோகத்தரிடம் வாக்குமூலம் எடுத்துச்சென்றதாக அறிந்தேன். ஆனால் என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய அந்த உத்தியோகத்தரை பொலிசார் இன்னும் கைது செய்யாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.சுகமானாலும் நான் அங்கு செல்லமாட்டேன்.அவர் அதிகாரி அல்ல ஒரு சர்வாதிகாரி போல அராஜகம் நடாத்துகிறார். அச்சமாக உள்ளது. அவமானப்பட்டுள்ளேன். எனக்கு நீதி வழங்கவேண்டும். என்றார்.

கல்முனை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் இஸ்ஸத்தீன் லத்தீப்பிடம் கேட்டபோது

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை 3வது பெண் விடுதியில் தாக்குதல் சம்பவம் காரணமான ஒரு பெண்மணி அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை எமக்கு கிடைத்த முறைப்பாட்டின் ஊடாக அறியக்கிடைத்தது.

குறித்த தாக்குதலினால் பெண் ஊழியரது செவிப்பறை வெடித்துள்ளதா இல்லையா என்பதை வைத்தியப்பரிசோதனைதான் உறுதிசெய்யவேண்டும்.அதன்பின்னர் சட்டவைத்திஅதிகாரியின் மருத்துஅறிக்கையும் எமக்கு வழங்கப்படும்.பின்னர் தாக்கப்பட்டவரின் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விசாரணைகளை மேற்கொண்ட பின்பே எதுவும் கூறமுடியும் என்றார்.
சம்பவத்தின் பின்னணி

நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையத்தில் நிலைய முகாமைத்துவ உத்தியோகத்தராக பணி புரிந்து வந்த பி.தவப்பிரியா என்பவர் கடந்த முதலாம் திகதி நிலையத்தின் தலைமை கமநல உத்தியோகத்தரினால் கடமை நேரத்தில் தாக்கப்பட்டார்.

புதிய வருடத்தின் கடந்த 1 ம் திகதி சத்திய பிரமாணம் நிகழ்வு ஆரம்பமாகிய வேளை இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் அனைத்து ஊழியர்களுக்கு முன்னிலையில் தனக்கு கன்னத்தில் குறித்த நபர் அறைந்துள்ளதாக அன்றைய தினம் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை மேற்கொண்ட பின்னர் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குறித்த பெண் ஊழியர் தாக்கப்பட்டு 3 நாட்கள் ஆகியும் பொலிஸார் தாக்குதல் மேற்கொண்ட அதிகாரி மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாதிருப்பது தனது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் கல்முனை பிராந்திய கிளையில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.மேலும் பாதிக்கப்பட்ட பெண் எழுதியுள்ள கடிதம் ஒன்றில் குறித்த அலுவலகத்தில் பணியை தொடர விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.


ஐ.எல்.எ காலிர்க் இதுவரை கைது செய்யப்படவில்லை. தலைமறைவாக ஓடி ஒளிந்துள்ளார் 




பெண் ஊழியருக்கு ஓங்கி அறைந்த சம்பவம்-நடந்தது என்ன? Rating: 4.5 Diposkan Oleh: Office

No comments:

Post a Comment

Walden