Pages

Monday 11 September 2017

43 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் ஆலையடிவேம்பு வீரர்கள் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை


கடந்த (செப்டெம்பர்) 6 மற்றும் 7 ஆந் திகதிகளில் கண்டி, திகண விளையாட்டுத் தொகுதி உள்ளக அரங்கில் நடைபெற்ற 43 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவு சார்பாகக் கலந்துகொண்ட ராம் கராத்தே தோ (RAM KARATE – DO) சங்கத்தின் கராத்தே வீரர்களான கே.சாரங்கன், எஸ்.ரிசோபன் மற்றும் பி.ஷரோன் சச்சின் ஆகியோர் கலந்துகொண்ட குழு காட்டா (Team KATA) போட்டியில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தினைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தினைச் சுவீகரித்துச் சாதனை படைத்துள்ளனர்.

இலங்கையின் தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் கிழக்கு மாகாணத்திலிருந்து குழு காட்டா பிரிவில் கலந்துகொண்ட ஒரு அணி பதக்கம் வென்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.

குறித்த போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றிய வீரர்களுக்கான பயிற்சிகளை ஆலையடிவேம்பிலுள்ள பிரசித்திபெற்ற ராம் கராத்தே தோ சங்கத்தின் பிரதம போதனாசிரியர் சிகான் கே.ஹேந்திரமூர்த்தி மற்றும் உதவிப் போதனாசிரியர் கே.ராஜேந்திர பிரசாத் (ராமிலன்) ஆகியோர் இணைந்து முன்னெடுத்திருந்ததுடன், இவ் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கும் மூலகாரணமாக அமைந்திருந்தனர்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த ராம் கராத்தே தோ சங்கத்தின் பிரதம போதனாசிரியர் சிகான் கே.ஹேந்திரமூர்த்தி, எமது வீரர்கள் மீது நாங்கள் வைத்திருந்த அசையாத நம்பிக்கையை தங்களின் திறமையின் மூலம் அவர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர். தங்கப் பதக்கத்தை வெற்றிகொள்ள முடியாது போனமை சற்று வருத்தமளித்தாலும், விட்ட தவறுகளைத் திருத்திக்கொண்டு அடுத்த வருடம் மேலும் அதிகமான பயிற்சிகளை மேற்கொண்டு தங்கப் பதக்கம் என்ற இலக்கை அடைய முயற்சிப்போம் என்று தெரிவித்ததுடன், குறித்த போட்டி நிகழ்வுக்கான பயிற்சிகளைக் கிரமமாக மேற்கொள்ளும்வகையில் ஆலையடிவேம்பு உள்ளகப் பயிற்சி அரங்கைத் தந்துதவி தங்களுக்குத் தொடர்ச்சியாக ஊக்கமளித்த ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன், உதவி பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்களான எம்.எச்.எம்.அஸ்வத், எஸ்.பூபாலராஜா ஆகியோருக்கு நன்றி தெரிவித்ததுடன், கடந்த வருடத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் விளையாட்டு உத்தியோகத்தராகக் கடமையாற்றி தற்போது சாய்ந்தமருது பிரதேச செயலகத்துக்கு இடமாற்றம் பெற்றுள்ள ஏ.ரிசந்தனையும் நன்றியோடு நினைவுகூர்வதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் அக்கரைப்பற்று தருமசங்கரி விளையாட்டு மைதானத்தின் அமைந்துள்ள உள்ளக பயிற்சி அரங்கிற்கு கராத்தே விரிப்புகளை வழங்கி இவ் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு ஒத்தாசை வழங்கிய அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரனுக்கும் நன்றி கூறினார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸனிடம் இவ்வெற்றி குறித்துக் கேட்டபோது பதிலளித்த அவர், முதலில் கிழக்கு மாகாணத்தின் கௌரவத்துக்குரிய கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணிக்கு தாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இவ்வருட தேசிய விளையாட்டு விழாவில் கராத்தே குழு காட்டா போட்டிகளில் பங்குபற்றி வெள்ளிப் பதக்கம் வென்று எமது ஆலையடிவேம்பு பிரதேசத்துக்குப் பெருமை சேர்த்த வீரர்கள் கௌரவிக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டதோடு, அமைச்சர் அவர்கள் தனது வேண்டுகோளுக்குச் செவிமடுத்து நீண்டகாலமாக பூர்த்திசெய்யப்படாதிருந்த ஆலையடிவேம்பின் உள்ளக விளையாட்டுப் பயிற்சி அரங்கினைப் பூர்த்திசெய்து எமது வீரர்கள் அங்கே தமது பயிற்சிகளைத் தொடரக் காரணமாயிருந்தார். அத்துடன் குறித்த பயிற்சி அரங்கினை விரைவாகப் பூர்த்திசெய்ய உதவிய கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளர் என்.மதிவண்ணனின் சேவையும் பாராட்டத்தக்கது எனவும் குறிப்பிட்டார்.







No comments:

Post a Comment

Walden