Pages

Friday 18 November 2016

புனர்வாழ்வு அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் கண்ணகிகிராமத்துக்கு விஜயம்


சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் வழிகாட்டலில் கடந்தகால உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்காக நடைமுறைபடுத்தப்பட்டுவரும் வீட்டுத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் வீடுகள், மலசலகூடங்கள், பல்தேவைக் கட்டடம் மற்றும் பாதை சீரமைப்புக்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயும் கள விஜயமொன்று இன்று (18) காலை கண்ணகிகிராமத்தில் இடம்பெற்றது.

குறித்த வீட்டுத்திட்டத்தில் முதற்கட்டமாக அமைக்கப்பட்டுள்ள வீடுகளை அமைச்சரின் தலைமையில் உத்தியோகபூர்வமாகப் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வுகள் விரைவில் அம்பாறையில் இடம்பெறவுள்ள நிலையில், அதன் முன்னோடியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் கண்ணகிகிராமத்தில் இடம்பெற்ற குறித்த நேரடி விஜயத்தில் புனர்வாழ்வு அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.டபிளியு. திஸாநாயக்க கொழும்பிலிருந்து வருகைதந்து வேலைத்திட்டங்களைப் பார்வையிட்டதுடன், வீட்டுத்திட்டப் பயனாளிகளைச் சந்தித்து அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிதியுதவிகளைக் கொண்டு விரைவாக அவற்றை அமைத்து முடிப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கியதுடன், சீரமைக்கப்பட்டுவரும் பாதைகளைப் பார்வையிட்டதோடு மலசலகூடப் பயனாளிகளையும் சந்தித்து அவர்களது கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

அவரது இவ்விஜயத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர், கண்ணகிகிராமத்துக்கான கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.











No comments:

Post a Comment

Walden