Pages

Friday 1 July 2016

முன்பிள்ளைப்பருவ சிறார்களின் ஆற்றல்களை மேம்படுத்தும் சித்திரப் போட்டி நிகழ்ச்சி


தேசிய சிறுவர் செயலகத்தின் அனுசரணையோடு ஆலையடிவேம்பு பிரதேச முன்பிள்ளைப்பருவ சிறார்களின் அழகியற்கலை ஆற்றல்களை மேம்படுத்தும் நோக்கில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட சித்திரப் போட்டி நிகழ்ச்சியொன்று நேற்று (30) இடம்பெற்றிருந்தது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியை பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன் ஏற்பாடு செய்திருந்ததோடு, பிரதம நடுவராக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனும், சிறப்பு நடுவர்களாகப் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா, கணக்காளர் கே.கேசகன், மேலதிக மாவட்டப் பதிவாளர், எம்.பிரதீப் மற்றும் நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

ஆலையடிவேம்பு பிரதேசத்தின் 24 முன்பள்ளி மாணவர்கள் 756 பேரிடையே கடந்தகாலத்தில் நடாத்தப்பட்ட போட்டிகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 55 மாணவர்கள் பங்குபற்றிய இப்போட்டி நிகழ்ச்சியில் நடுவர்களால் தலைப்பு, வர்ணப் பயன்பாடு, நேர முகாமைத்துவம் மற்றும் ஒழுங்கமைப்பு ஆகிய தேவைப்பாடுகளுக்கமைவாக 10 மாணவர்கள் வெற்றியாளர்களாகத் தெரிவுசெய்யப்பட்டதுடன், அவர்களில் முதல் 3 இடங்களைப் பெற்றவர்கள் எதிர்வரும் நாட்களில் மாவட்ட மட்டத்தில் இடம்பெறவுள்ள சித்திரப் போட்டிகளில் கலந்துகொள்ளும் தகுதியைப் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்வின் இறுதியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவமும், போட்டி நிகழ்ச்சியில் ஆர்வத்தோடு பங்குபற்றிய அனைத்து மாணவச் சிறார்களுக்குமாக இனிப்புக்களைப் பகிர்ந்தளிக்கும் வைபவமும் அங்கு இடம்பெற்றிருந்தன.





















No comments:

Post a Comment

Walden