Pages

Tuesday 1 December 2015

ஆலையடிவேம்பில் இளைஞர் சிரம சக்தி கிராம அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

(தியாஷினி)

இளைஞர் விவகார அமைச்சின் அனுசரணையோடு தேசிய இளைஞர் சிரம சக்தி வேலைத்திட்டத்தின்கீழ் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் பிரதேச சம்மேளனத்தினூடாக அளிக்கம்பையில் கரப்பந்தாட்ட மைதானமொன்றை அமைப்பதற்கான ஆரம்பநிகழ்வும் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள ஒரேயொரு தமிழ் தேசிய பாடசாலையான ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் துவிச்சக்கர வண்டிகளுக்கான தரிப்பிடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நடும் வைபவமும் ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் கே.பிரபாகரன் தலைமையில் நேற்று (30) காலை இடம்பெற்றன.

முதலில் அளிக்கம்பை கிராமத்திலுள்ள புனித சவேரியார் ஆலய வளாகத்தில் அளிக்கம்பை புத்தொளி இளைஞர் கழகத்திற்கான கரப்பந்தாட்ட மைதானத்துக்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பித்துவைக்கப்பட்டன. இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனும், விசேட அதிதிகளாக புனித சவேரியார் ஆலயப் பங்குத்தந்தை அருட்திரு. தேவராஜ் அடிகளாரும், அளிக்கம்பை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் எஸ்.மணிவண்ணன், பிரதேச செயலாளரின் வெகுஜனத் தொடர்புகள் உத்தியோகத்தர் எஸ்.ஜே.பிரேம் ஆனந்த், கிராம உத்தியோகத்தர் கே.லோகநாதன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எல்.திருமுருகன் மற்றும் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.பாக்கியராசா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது குறித்த கரப்பந்தாட்ட மைதானம் அமைக்கப்படவுள்ள இடத்தை சீர் செய்யும்வகையில் முதலாவதாக மண்ணிட்டு நிரப்பும் வேலைகளை பிரதேச செயலாளர் தலைமையிலான அதிதிகள் இணைந்து ஆரம்பித்துவைத்தனர். பின்னர் அளிக்கம்பை புத்தொளி இளைஞர் கழகத்தின் உறுப்பினர்களும் அவ்வேலையினைத் தொடர்ந்து முன்னெடுத்தனர். அதனைத்தொடர்ந்து இளைஞர் விவகார அமைச்சின் தேசிய இளைஞர் சிரம சக்தி வேலைத்திட்டம் தொடர்பாக இளைஞர் கழக உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டமொன்று புனித சவேரியார் ஆலய வளாகத்தில் பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் கே.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றது.

அடுத்து அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய கல்லூரியில் இடம்பெற்ற துவிச்சக்கர வண்டிகளுக்கான தரிப்பிடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நடும் வைபவத்தில் பிரதேச செயலாளரும், கல்லூரி முதல்வர் எம்.கிருபைராஜா, பிரதி முதல்வர் எஸ்.லோகநாதன், ஆலையடிவேம்பு பிரதேச சம்மேளனத் தலைவர் கே.தேவதர்ஷன் ஆகியோர் இணைந்து அடிக்கற்களை நட்டுவைத்தனர். அதனைத்தொடர்ந்து தேசிய இளைஞர் சிரம சக்தி வேலைத்திட்டம் தொடர்பாக இளைஞர் கழக உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டமும் குறித்த கல்லூரி வளாகத்தில் பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் கே.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.













No comments:

Post a Comment

Walden