Pages

Wednesday 29 April 2015

சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கோளாவில் – 1, அமரர் தியாயப்பன் – பாலாத்தை ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில், கடந்த 25-04-2015 சனிக்கிழமை பிற்பகல் பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் மிகப் பிரமாண்டமான முறையில் இவ்வாண்டுக்கான பாரம்பரிய கலாசார விளையாட்டு நிகழ்வுகளுடனான சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவானது இடம்பெற்றது.





அம்பாறை மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஜி.வி.சிந்தன உதார நாணயக்கார, அம்பாறை மாவட்ட திவிநெகும செயலகப் பணிப்பாளர் யு.பி.எஸ்.அனுருத்த பியதாச ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும், ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கணக்காளர் கே.கேசகன்,பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. திலகராணி கிருபைராஜா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

தேசியக்கொடி, மாகாணக்கொடி மற்றும் பிரதேச செயலகக் கொடிகளையேற்றி, தேசியகீதமிசைத்து ஆரம்பித்துவைக்கப்பட்ட மைதானப் போட்டி நிகழ்வுகள் பாரம்பரிய முறைப்படி மங்கல விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கத்தோடு தமிழர் பெருமக்களின் பாரம்பரியத்தினைப் பறைசாற்றும் வழுக்கு மரமேறுதல், தலையணைச் சமர், கயிறிழுத்தல், கண்கட்டி முட்டியுடைத்தல், கிடுகிழைத்தல், தேங்காய் துருவுதல், முட்டை மாற்றுதல் ஆகிய போட்டி நிகழ்வுகள் வளர்ந்தோருக்கும், யானைக்குக் கண் வைத்தல், சாக்கோட்டம், சமநிலை ஓட்டம், வினோத உடை, பலூன் ஊதியுடைத்தல், காசு பொறுக்குதல், மிட்டாய் பொறுக்குதல் போன்ற போட்டி நிகழ்வுகள் சிறுவர்களுக்கும் நடாத்தப்பட்டதுடன் ஒவ்வொரு போட்டி நிகழ்ச்சிகளையும் அதிதிகள் பார்வையிட்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தனர்.

இவ்விளையாட்டு விழாவின்போது அண்மையில் இடம்பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச விளையாட்டுப் போட்டிகளின்போது உதைபந்தாட்டத்தில் இரண்டாமிடத்தைப் பெற்ற கண்ணகிகிராமம் கனகர் விளையாட்டுக் கழக வீரர்களுக்குப் பாதணிகள் பிரதேச செயலாளரால் அன்பளிப்புச் செய்யப்பட்டதுடன், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சேமிப்பு ஊக்குவிப்பில் சிறப்பான சாதனைகளைப் புரிந்த ஆலையடிவேம்பு பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர்களும் கிராமமட்ட மாதர் சங்க உறுப்பினர்களும் பரிசுகள், சான்றிதழ்கள் என்பன வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். இறுதியாக இவ்விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய வீர, வீராங்கனைகளுக்கான பரிசில்கள் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டன

No comments:

Post a Comment

Walden