Pages

Tuesday 17 June 2014

சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தைச் சிறப்பிக்கும் மரநடுகையும் வைபவமும்

கடந்த ஜூன் 5 ஆந்திகதி இலங்கை உட்பட சர்வதேச ரீதியாக அனுஸ்டிக்கப்பட்ட சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தைச் சிறப்பிக்கும் வகையிலான விசேட வைபவமும் மரநடுகையும் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள இராம கிருஸ்ண மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று, 10-06-2014 செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றன.

அம்பாறை மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையால் ஏற்பாடு செய்யப்பட்டு ஆலையடிவேம்பு பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.இர்பான் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவங்களில் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் கலந்து சிறப்பித்ததுடன், விசேட அதிதியாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோகத்தர் எஸ்.உதயராஜாவும், சிறப்பு அதிதிகளாக இராம கிருஸ்ண மத்திய மகா வித்தியாலய அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம், ஆலையடிவேம்பு பிரதேச அரசுசாரா நிறுவனங்களுக்கான இணையத்தின் தவிசாளர் வி.பரமசிங்கம், அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய கல்லூரியின் பிரதியதிபர் எஸ்.லோகநாதன் மற்றும் அட்டாளைச்சேனைப் பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் ஜெமீல் ஆகியோரும் குறித்த பாடசாலை மாணவ மாணவியரும் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

பாடசாலை வளாகத்தில் மரநடுகையுடன் ஆரம்பமான இந்நிகழ்வுகளில் பிரதேச செயலாளரும் சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோகத்தரும் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நாட்டிவைத்தனர். அதனைத்தொடர்ந்து தேசிய சுற்றாடல் கீதத்துடன் ஆரம்பமான உலக சுற்றாடல் தின விசேட வைபவத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வினை அடிப்படையாகக்கொண்ட மாணவர்களின் பேச்சுக்கள் இடம்பெற்றதுடன் அதிதிகளின் சிறப்புரைகளும் இடம்பெற்றன.

இறுதியாக அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய கல்லூரியின் பிரதியதிபர் மற்றும் இராம கிருஸ்ண மத்திய மகா வித்தியாலய அதிபர் ஆகியோருக்கு மரக்கன்றுகளைக் கையளிக்கும் நிகழ்வுடன் வைபவங்கள் நிறைவுற்றன.

குறித்த சர்வதேச சுற்றுச்சூழல் தின நிகழ்வுகளுக்கான அனுசரணையை ஆலையடிவேம்பு பிரதேச அரசுசாரா நிறுவனங்களுக்கான இணையம் வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Walden