Pages

Monday 18 November 2013

விவேகானந்த வித்தியாலயத்தில் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு.


விவேகானந்த வித்தியாலயத்தில் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு.

(உ.உதயகாந்த்)

இவ்வருடம் இடம்பெற்ற தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவித்து சான்றிதழ் வழங்கும் வைபவம் கடந்த 22.10.2013, செவ்வாய்க்கிழமை காலை அக்கரைப்பற்று, விவேகானந்த வித்தியாலயத்தில் அதிபர் திருமதி.பீ.நித்தியானந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இவ்விழாவிற்கு அதிதிகளாக திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன், ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப் பணிப்பாளர் வீ.குணாளன், இராம கிருஸ்ண மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி.எல்.கோபாலபிள்ளை, கோளாவில் விநாயகர் மகா வித்தியாலய அதிபர் எம்.கிருஸ்ணபிள்ளை மற்றும் இப்பாடசாலையின் முன்னாள் அதிபர்  திருமதி.எல்.பேரின்பராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

சித்திபெற்ற மாணவர்களும் அதிதிகளும் குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களால் சாகாமம் வீதியிலிருந்து பாண்ட் வாத்திய இசையுடன் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு, மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தலைமையுரை, வரவேற்புரைகளைத் தொடர்ந்து அதிதிகள் உரைகள் இடம்பெற்றதோடு பாடசாலை மாணவர்களால் கலைநிகழ்ச்சிகளும் இவ்விழாவில் மேடையேற்றப்பட்டன. இவற்றின் முடிவில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவித்து சான்றிதழ் வழங்கும் மற்றும் பரிசில்கள் வழங்கும் வைபவம் என்பன இடம்பெற்றன.

இம்முறை இப்பாடசாலையில் 6 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்திருந்ததுடன், இவர்களில் சு.டனூஜ் என்ற மாணவன் 171 புள்ளிகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றிருந்தார். அத்தோடு, துரதிஸ்டவசமாக 153 புள்ளிகளைப் பெற்று ஒரு புள்ளியால் மாணவரொருவர் சித்திபெறும் வாய்ப்பை இழந்திருந்தமை கவலைதரும் விடயமாக இருந்தது. எனினும் அந்த மாணவரும் சித்தியடைந்த ஏனைய மாணவர்களுக்குச் சமமாகக் கௌரவிக்கப்பட்டமை இவ்விழாவில் சிறப்பம்சமாக அமைந்திருந்தது.

கடந்த வருடம் இப்பாடசாலையில் 2 மாணவர்களே புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்திருந்தபோதிலும் இவ்வருடம் 6 மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை இப்பாடசாலையின் கல்வி வளர்ச்சியில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.


இந்நிகழ்வில் இப்பாடசாலையின் முன்னாள் அதிபர்  திருமதி.எல்.பேரின்பராஜா அவர்களின் சேவையைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டதோடு நிகழ்வின் இறுதியில் மாணவர்களின் வெற்றிக்காய் அரும்பாடுபட்ட ஆசிரியர் எஸ்.பிரபாகரன் அவர்கள் பொன்னாடை போர்த்தப்பட்டும் பரிசுகள் வழங்கப்பட்டும் வாழ்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் அவரது பெற்றோரும் கௌரவிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.















No comments:

Post a Comment

Walden