Pages

Friday 26 September 2014

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களின் தொடர்ச்சியாக

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களின் தொடர்ச்சியாக அளிக்கம்பை கிராமசேவகர் பிரிவிலுள்ள பொதுமக்கள் வாழும் சூழலில் நேற்று, 22-09-2014 திங்கட்கிழமை காலை திடீர் களப்பரிசோதனையொன்று மேற்கொள்ளப்பட்டது.

ஆலையடிவேம்பு பிரதேசத்தின் எல்லைக் கிராமமான இங்கு டெங்கு நோயாளியொருவர் அண்மையில் இனங்காணப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட இத் திடீர்ப்பரிசோதனையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் வெகுஜனத் தொடர்பு உத்தியோகத்தரும் டெங்கு கட்டுப்பாட்டு இணைப்பாளருமான கே.கிரிஷாந்தன் தலைமையில் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களுக்காகப் பணியமர்த்தப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள், குறித்த கிராமசேவகர் பிரிவுக்கான கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் பங்குகொண்டனர். 
Displaying P1070588.JPG
Displaying P1070551.JPG


இதன்போது டெங்கு நுளம்புகள் பரவக்கூடியவகையில் காணப்பட்ட பல இடங்களும் அங்கிருந்த பொருட்களும் உடனடிப் பரிசோதனைகள் செய்யப்பட்டு அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் முழுமையாகத் துப்பரவு செய்யப்பட்டதுடன் சேகரிக்கப்பட்ட கழிவுப்பொருட்கள் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் கழிவகற்றும் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு அதன் ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால்அளிக்கம்பை கிராம மக்களுக்கான டெங்கு நோயை முற்றாகக் கட்டுப்படுத்துவது தொடர்பிலான விழிப்புணர்வுக் கூட்டமொன்றும் நடாத்தப்பட்டது.
குறித்த களப்பரிசோதனையில் கலந்துகொண்ட உத்தியோகத்தர்களின் சிபாரிசின்பேரில் இன்று, 23-09-2014 செவ்வாய்க்கிழமை காலை ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் நுளம்புகள் தடுப்புப் பிரிவு உத்தியோகத்தர்களால் சுகாதாரப் பரிசோதகர்களது மேற்பார்வையுடன் அளிக்கம்பை கிராமத்தில் நேற்றைய பரிசோதனைகளில் டெங்கு ஆட்கொல்லி நுளம்புகள் பரவக்கூடிய இடங்களாக அடையாளங்காணப்பட்ட பகுதிகளில் புகையூட்டல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ப்ல்லின கலை நிகழ்வுகளின் அரங்கேற்ற வைபவம்

கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட செயலகத்தின் கலாசாரப் பிரிவு நடாத்திய பல்லின கலை நிகழ்வுகளின் அரங்கேற்ற வைபவம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் இன்று, 25-09-2014 வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட செயலகக் கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் கே.விமலநாதன் கலந்துகொண்டார். அத்துடன் கௌரவ அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் ஆகியோரும், விசேட அதிதியாக அம்பாறை மாவட்ட உதவிச் செயலாளர் ஜீ.வி.சிந்தன உதார நாணயக்காரவும் கலந்து சிறப்பித்தனர்.
ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூவினங்களையும் சேர்ந்த இந்து, இஸ்லாமிய, பௌத்த மற்றும் கிறிஸ்தவ மதத்தலைவர்களின் ஆசியுடன் இடம்பெற்ற இக்கலாசார நிகழ்விற்குக் குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் கலைஞர்களும் கலந்துகொண்டதுடன், தமது கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் கலை நிகழ்வுகளையும் அரங்கேற்றினர்.
அடுத்து பல்லின கலை நிகழ்வுகளை மேலும் சிறப்பிக்கும் வகையில் கலாசார மேம்பாடு குறித்த அதிதிகளின் உரைகளும் அங்கு இடம்பெற்றதுடன், கலை நிகழ்வுகளை அரங்கேற்றிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.